Crime, law and justice
உத்தரவை மீறி மாணவருக்கு நோட்டீஸ் அனுப்புவதா? உ.பி., கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடில்லி, செப். 10– டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பல்கலை
டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற பல்கலை மாணவருக்கு கிரேட்டர் நொய்டா மாவட்ட நிர்வாக கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘எவ்வளவு துணிச்சல் இருந்தால் மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பீர்கள்?’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு வினாதாள் கசிவு விவகாரத்தை கையில் எடுத்த கரப்பான்பூச்சி கட்சி டில்லியில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த கவுதம் புத்தா பல்கலை மாணவர் அக்ஷத் திரிபாதிக்கு கிரேட்டர் நொய்டா மாவட்ட கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு மாறாக கிரேட்டர் நொய்டா மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்திருக்கும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, கடும் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
எந்தவொரு மாணவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையோ கட்டுப்பாடோ விதிக்க கூடாது என தெளிவுபடுத்தி இருந்தோம். அந்த உத்தரவை மீற கலெக்டருக்கு எப்படி துணிச்சல் வந்தது? இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் கேள்வியே எழக்கூடாது. உத்தரவை மீறிய கலெக்டரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்கப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து, அந்த மாணவருக்கு அனுப்பிய நோட்டீசை அதிகாரிகள் உடனடியாக திரும்ப பெற்றனர்.