Politics
மேயருக்கு ‘செக்’... டெண்டர்களுக்கு ‘பிரேக்’... களேபரமாகும் காரைக்குடி மாநகராட்சி!

2026-2027 நிதியாண்டுக்கு பேனா, பேப்பர், டோனர் உள்ளிட்ட எழுதுபொருள்கள் வாங்க ரூ.50 லட்சம் செலவழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
காரைக்குடி மாநகராட்சியின் முதல் மேயர் பதவி இழப்புத் தீர்மானம்; ரூ.4.19 கோடி மதிப்பிலான 3 ஆன்லைன் டெண்டர்களுக்கு தடை; ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு எழுதுபொருள் வாங்கும் தீர்மானத்துக்கு கடும் ஆட்சேபம் என ஆகஸ்ட் 31 அன்று மாமன்றமே மல்லுக்கட்டு அரங்கமாக மாறியது.
2024, மார்ச் 15-ல் காரைக்குடி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அது நகராட்சியாக இருந்தபோது 36 வார்டுகளில் நடந்த தேர்தலில், 22 இடங்களில் வென்று தி.மு.க மாமன்றத்தைக் கைப்பற்றியது. அப்போதே நகர்மன்றத் தலைவர் நாற்காலிக்குக் கடும் போட்டி நிலவியது. ‘குணசேகரன்தான் நகர்மன்றத் தலைவர்’ என இறுதி நிமிடம் வரை பேச்சுகள் பலமாக அடிபட்டன. ஆனால், க்ளைமாக்ஸில் அப்போதைய அமைச்சர் பெரியகருப்பனின் ஆதரவோடு என்ட்ரி கொடுத்த எஸ்.முத்துத்துரை, காரைக்குடி நகராட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்; குணசேகரன் துணைத் தலைவரானார். அன்று தொடங்கியதுதான் இருவருக்குமான ஏழாம் பொருத்தம். காரைக்குடி மாநகராட்சியாகி இருவரும் மேயர், துணை மேயரான பின்பும் தொடர்கிறது.‘மேயர் எங்களை மதிப்பதில்லை; வளர்ச்சிப் பணிகள் இல்லை’ எனக் கூறி 2025, ஜூலை 10-ல் துணை மேயர் குணசேகரன் தலைமையில் 21 கவுன்சிலர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். தொடர்ந்து 24 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குக் கோரிக்கை விடுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கெடுப்பு நடந்தபோது, தீர்மானம் கொண்டுவந்த துணை மேயர் கோஷ்டியே கூட்டத்துக்கு வரவில்லை. ‘அவர்களைக் கடத்திவிட்டார்கள்; துணை மேயர் உயிருடன் இருக்கிறாரா?’ என அ.தி.மு.க-வினர் `பகீர்’ கிளப்ப, போதிய உறுப்பினர்கள் இன்றி தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்தச் சூழலில், மேயர் முத்துத்துரை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, குணசேகரன் ‘பொறுப்பு மேயராக’ நாற்காலியில் அமர்ந்தார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1996, பிரிவு 32(1)(j)-ன்படி, தொடர்ந்து மூன்று கூட்டங்களில் பங்கேற்காவிட்டால் பதவி பறிபோகும். பிப்.13, மார்ச் 10, ஜூன் 24 எனத் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு மேயர் வராததால், அவரைப் பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் ஆகஸ்ட் 31 கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது. மொத்தமுள்ள 34 கவுன்சிலர்களும் ஏகமனதாக ஆதரவளித்து, மேயரின் நாற்காலிக்குச் ‘செக்’ வைத்துள்ளனர்.
இந்தக் களேபரங்களுக்கு இடையே சுயேச்சை கவுன்சிலர் மெய்யரிடம் பேசினோம். “சட்டப்படி மேயரைப் பதவிநீக்கம் செய்ய ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ரூ.4.19 கோடி மதிப்பிலான 3 திட்டப் பணிகளுக்கான ஆன்லைன் டெண்டரில் தொகையை விவரமாகக் குறிப்பிடாமல் ஒதுக்கப் பார்த்தார்கள். அதைத் தட்டிக்கேட்டு நிறுத்திவிட்டோம். புதிய பஸ் ஸ்டாண்ட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலத்திலும் போட்டியே இல்லாமல் டெண்டரை முடிக்கப் பார்த்தார்கள்; அதையும் ரத்துசெய்ய வைத்தோம். நகருக்கு வெளியேயுள்ள ஆஸ்பத்திரி, கல்லூரிகளுக்குச் செல்ல ஆட்டோக்காரர்கள் ரூ.300 கேட்கிறார்கள். பஸ் முதலாளிகளும் ஆட்டோக்காரர்களும் கூட்டுச் சேர்ந்து ஷேர் ஆட்டோவை முடக்கிவைத்திருக்கின்றனர். ஏழை மக்களுக்காகக் காரைக்குடியில் ஷேர் ஆட்டோ ஓட வேண்டும் என மன்றத்தில் பெரிய சண்டையே போட்டிருக்கிறேன்” என்றார்.
மாமன்றக் கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய அ.தி.மு.க கவுன்சிலர் ஆகா.பிரகாஷிடம் பேசினோம். “2026-2027 நிதியாண்டுக்கு பேனா, பேப்பர், டோனர் உள்ளிட்ட எழுதுபொருள்கள் வாங்க ரூ.50 லட்சம் செலவழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். மூன்றாம் நிலை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் என்பது அபரிமிதமான தொகை. ஒவ்வொரு வருடமும் உத்தேசத் தொகையை ஒதுக்கித் தீர்மானம் பாஸ் செய்துவிடுகிறார்கள். ஆனால், டெண்டர் யாருக்குப் போகிறது, என்ன கொட்டேஷன், உண்மையில் எவ்வளவு செலவு என்ற எந்த அறிக்கையையும் அடுத்த மன்றக் கூட்டத்தில் வைப்பதில்லை. நாங்கள் கடுமையான ஆட்சேபனை பதிவுசெய்தும், பெரும்பான்மையை வைத்து தீர்மானத்தைப் பாஸ் செய்துவிடுகிறார்கள். இந்த முறைகேடுகளை மக்கள் மத்தியில் ஊடகங்கள் கொண்டு சென்றால்தான் தீர்வு கிடைக்கும்” என்றார்.
இது குறித்து பொறுப்பு மேயர் குணசேகரனிடம் கேட்டபோது, “34 உறுப்பினர்களின் ஆதரவோடு மேயரைப் பதவிநீக்கும் தீர்மானம் பாஸாகி, கமிஷனருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கவுன்சிலர்களின் சந்தேகங்களை ஏற்று ரூ.4.19 கோடி டெண்டரும், குறைவான தொகை கோரப்பட்டதால் சைக்கிள் ஸ்டாண்ட் ஏலமும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் சுமையைக் குறைக்க ஷேர் ஆட்டோ இயக்கக் கோரி, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறோம். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன்தான் எழுதுபொருள் செலவுத் தொகைக்குத் தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது” என்றார்.
மாநகராட்சி ஆணையர் பாலுவிடம் பேசியபோது. “மேயர் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதை மன்றத் தலைவர் கையெழுத்திட்டு அதிகாரபூர்வமாக அனுப்பிய பிறகே, அது சட்டபூர்வ வடிவம் பெறும். அதன் பின்னர்தான் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப முடியும்” என்றார்.
காரைக்குடி காரசாரமான உணவுக்கு மட்டுமல்ல... காரசாரமான அரசியலுக்கும் பெயர் பெற்ற ஊர்தான்!
