Politics
ஐந்து ஆண்டு போர்: கியெவ் நகரில் ‘அமைதி எக்ஸ்பிரஸ்’ - புதின்–ஜெலென்ஸ்கி இடையே சமரசம் சாத்தியமா?

கல்லாதது உலகளவு: மாஸ்கோவிலிருந்து கியெவ் வரை சென்ற ‘அமைதி எக்ஸ்பிரஸ்’ பயணம், போரை ஒரே நாளில் முடித்துவிடவில்லை. ஆனால், நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஒரு கதவைத் திறந்திருக்கிறது.
உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஓர் அசைவு ஏற்பட்டிருக்கிறது. அதிலும், இதுவரை மாஸ்கோவுக்கு பலமுறை சென்றுவந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதர்கள் விட்காஃப், குஷ்னர் இருவரும் முதன்முறையாக கியெவ் சென்றிருப்பது கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
செப்டம்பர் 6-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கியெவ் ரயில் நிலையத்தில் அவர்களின் ரயில் வந்து நின்றபோது, அங்கிருந்த காட்சியே வித்தியாசமாக இருந்தது. ‘PEACE EXPRESS’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த நடைமேடையில் இறங்கிய இருவரும், உக்ரைன் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை வரவேற்க கியெவின் சோபியா சதுக்கத்தில் ஜெலென்ஸ்கி காத்திருந்தார். ரஷ்யத் தாக்குதல்களில் உயிரிழந்த உக்ரைனிய வீரர்களின் முகங்கள் இடம்பெற்றிருந்த நூற்றுக்கணக்கான தட்டிகள் அந்தச் சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சூழலில்தான் அமெரிக்கத் தூதர்களைச் சந்தித்தார் ஜெலென்ஸ்கி.
“ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னருக்காக நீண்ட காலமாகக் காத்திருந்தோம்” என்று கூறிய ஜெலென்ஸ்கி, இருவரையும் கட்டியணைத்து வரவேற்றார். இந்த வரவேற்பின் பின்னணியில் ஒரு முக்கியமான அரசியல் செய்தியும் இருந்தது. மாஸ்கோவுக்குச் செல்ல அமெரிக்கத் தூதர்களுக்குக் கதவுகள் திறந்திருந்த நிலையில், கியெவ் பயணம் நிகழவில்லை. இப்போது அந்த இடைவெளியும் நிரப்பப்பட்டிருக்கிறது. ஜெலென்ஸ்கியைச் சந்தித்த பின்னர், மத்திய கியெவிலுள்ள செயின்ட் சோபியா கதீட்ரலுக்கும் இருவரும் சென்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமான அந்தக் கதீட்ரலின் ஜன்னல்களும் ஜன்னல் சட்டங்களும் செப்டம்பர் 4-ம் தேதி ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் சேதமடைந்திருந்தன.
இதற்கிடையே, “நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்” என்று ஜெலென்ஸ்கி தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார். “போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அமைதி தேவை. பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை. கண்ணியமான போருக்குப் பிந்தைய அமைதி தேவை. எங்களுடைய முன்மொழிவுகள் தயாராக உள்ளன” என்றும் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்கத் தரப்பிலும் நம்பிக்கை குறைவாக இல்லை. செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், ஐந்தாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவிடம் “அமைதிக்கான ஒரு யோசனை உள்ளது” என்று தெரிவித்தார். “இரண்டு சிறந்த பேச்சுவார்த்தையாளர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னரை அனுப்பியுள்ளேன். ஏதேனும் செய்ய முடியுமா என்பதைப் பார்க்க அவர்களை அனுப்பியுள்ளோம். அதைச் செய்வதற்கான நல்ல வாய்ப்பும் உள்ளது” என்றார் ட்ரம்ப்.
ஆனால், இந்தப் பயணத்தின் பின்னால் இருக்கும் கதை அவ்வளவு எளிதானதல்ல. கியெவ் செல்வதற்கு முன்பாகவே விட்காஃப், குஷ்னர் இருவரும் மாஸ்கோ சென்றிருந்தனர். செப்டம்பர் 5-ம் தேதி புதினுடன் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் நேரடியாக கியெவ் நோக்கிப் புறப்பட்டனர். அந்தச் சந்திப்பு குறித்து புதினின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ், பேச்சுவார்த்தை “ஆக்கபூர்வமானது, மிகவும் வெளிப்படையானது” என்று வர்ணித்தார். போர் மட்டுமல்ல; பொருளாதார விவகாரங்கள், எதிர்காலத்தில் ரஷ்யா–அமெரிக்கா இடையே உருவாகக்கூடிய முக்கியமான பரஸ்பர நன்மை தரும் திட்டங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், உக்ரைன் தொடர்பான புதினின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. “உக்ரைன் மோதலின் அனைத்து மூலக் காரணங்களையும்” அகற்ற வேண்டும் என்று புதின் வலியுறுத்தியதாக உஷாகோவ் தெரிவித்தார். அதன் பின்னால் இருக்கும் ரஷ்யாவின் பழைய கோரிக்கைகள் தெளிவானவை. உக்ரைன் நடுநிலைமையை ஏற்க வேண்டும். தனது ராணுவத்தைக் குறைக்க வேண்டும். நேட்டோவில் இணையும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
இதற்கு மாறாக, கியெவின் கவலை வேறு. பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத போர்நிறுத்தம், ரஷ்யாவுக்கு மீண்டும் படைகளைத் திரட்டி அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும் இடைவெளியாகிவிடும் என்று உக்ரைன் கருதுகிறது. அதனால், போர்நிறுத்தம் மட்டும் போதாது; எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் தாக்காத வகையில் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும் என்பதே ஜெலென்ஸ்கியின் நிலைப்பாடு. இங்குதான் பேச்சுவார்த்தையின் மிகப்பெரிய முடிச்சு இருக்கிறது.
2022-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்த டொனெட்ஸ்க், லூஹான்ஸ்க், ஜபோரிஷியா, கெர்சன் ஆகிய நான்கு பகுதிகளின் முழுக் கட்டுப்பாட்டையும் மாஸ்கோ கோருகிறது. தற்போது உக்ரைன் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலிருந்தும் தனது படைகள் பின்வாங்க வேண்டும் என்பதும் ரஷ்யாவின் கோரிக்கை. ஆனால், உக்ரைன் இதை ஏற்கத் தயாராக இல்லை. தனது அரசியலமைப்பே இதற்குத் தடையாக இருப்பதாகக் கூறும் கியெவ், மக்களும் நிலப்பரப்பை விட்டுக்கொடுப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கிறது. குறிப்பாக டான்பாஸ் பிராந்தியம் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது.
பரந்த டான்பாஸ் பகுதியில் உக்ரைன் இன்னும் சுமார் 11 முதல் 12 சதவிகித நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மீதமுள்ள பெரும்பகுதி ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதிகளின் இறையாண்மையை ரஷ்யாவுக்கு மாற்றி, அதைச் சர்வதேச அளவில் அங்கீகரிக்க வேண்டும் என்பதே மாஸ்கோவின் நிலைப்பாடு. ஆனால், தன்னிடம் இருக்கும் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் கியெவ் பிடிவாதமாக உள்ளது.
அதிகபட்சமாக சில பகுதிகளை இரு தரப்பும் இணைந்து நிர்வகிப்பது குறித்துப் பேசலாம்; ஆனால் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்கிறது உக்ரைன். அதேபோல், உடனடியாக நேட்டோவில் சேர முடியாது என்பதையும் உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது நிரந்தர நடுநிலைமையாக மாற வேண்டும் என்பதற்கு ரஷ்யா அழுத்தம் கொடுக்கிறது. இரு தரப்புக்கும் இடையிலான இந்த இடைவெளிதான் அமைதிப் பேச்சுவார்த்தையின் மிகப்பெரிய சவால்.
கடந்த பிப்ரவரியில் விட்காஃப் மற்றும் ரஷ்ய–உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழுக்கள் 20 அம்ச அமைதித் திட்டத்தை இரண்டு முக்கிய பிரச்னைகளாகச் சுருக்கியிருந்தன. ஒன்று, ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஷியா அணுமின் நிலையத்தை யார் நிர்வகிப்பது? மற்றொன்று, கிழக்கு டான்பாஸ் பகுதியில் உக்ரைன் இன்னும் வைத்திருக்கும் நிலப்பரப்பின் எதிர்காலம் என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கிடைக்காமல் பேச்சுவார்த்தை முடங்கியது.
இதற்கிடையே, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், வெள்ளை மாளிகையின் கவனம் உக்ரைனிலிருந்து ஈரான் பக்கம் திரும்பியது. கடந்த ஆறு மாதங்களாக உக்ரைன் போர் தொடர்பான அமெரிக்காவின் அமைதி முயற்சியும் வேகம் இழந்தது. இந்தச் சூழலில்தான் விட்காஃப்–குஷ்னர் மீண்டும் களமிறங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் மாஸ்கோவுக்குச் சென்றபோது, கியெவ் மீதான தாக்குதல்களுக்கு 72 மணி நேர இடைநிறுத்தத்தை புதின் அறிவித்ததாக கிரெம்ளின் தெரிவித்தது. ஆனால், போர்க்களத்தின் நிலைமை வேறொரு கதையைச் சொல்கிறது. ரஷ்யப் படைகளின் முன்னேற்ற வேகம் சமீபத்தில் குறைந்திருந்தாலும், 1,250 கிலோமீட்டர் நீளமுள்ள போர்முனையில் மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறையைப் பயன்படுத்தி ரஷ்யா கியெவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிவேக ஜெட் இன்ஜின் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், தங்களது இலக்குகளை அடையும் என்றும் புதின் அமெரிக்கத் தூதர்களிடம் கூறியதாக உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய குஷ்னர், “இதுவரை பலனளிக்காத பல யோசனைகளை” அமெரிக்கக் குழு பரிசீலித்ததாகவும், “நிலையான அமைதிக்கு” தேவையான கூறுகளை அடையாளம் காண முயல்வதாகவும் கூறினார். “இது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது. அவர் பல கேள்விகளைக் கேட்டார். நாங்களும் பல கேள்விகளைக் கேட்டோம்” என்றார் குஷ்னர்.
ரஷ்யாவின் உண்மையான நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்ததால்தான் கியெவ் செல்வதற்கு முன்பு புதினைச் சந்தித்ததாக விட்காஃப் கூறினார். அவரது மதிப்பீட்டில், மாஸ்கோவில் “பெரும் முன்னேற்றம்” ஏற்பட்டிருக்கிறது. கியெவிலும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜெலென்ஸ்கியின் கணக்கு இன்னும் யதார்த்தமானது. “தற்போதைய நிலைமையைப் பார்த்தால் போர் குளிர்காலம் வரை நீடிக்கலாம்” என்று அவர் கூறியுள்ளார். அப்படி நடந்தால், உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஆதரவு தேவைப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், ரஷ்யா மீண்டும் தாக்குவதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் ஒரு நியாயமான அமைதியே உக்ரைனின் இலக்கு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கியெவில் நடைபெற்ற பல மணி நேரப் பேச்சுவார்த்தை எந்தவொரு மிகப்பெரிய முன்னேற்ற அறிவிப்பும் இல்லாமல் முடிந்தது. இருந்தாலும், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்ற நம்பிக்கை மட்டும் உருவாகியுள்ளது.
உக்ரைன், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் விரைவில் மீண்டும் சந்தித்துப் பேச உள்ளனர். ரஷ்யா–அமெரிக்கா–உக்ரைன் முத்தரப்பு சந்திப்புக்கும் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பும், இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
மாஸ்கோவிலிருந்து கியெவ் வரை சென்ற ‘அமைதி எக்ஸ்பிரஸ்’ பயணம், போரை ஒரே நாளில் முடித்துவிடவில்லை. ஆனால், நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஒரு கதவைத் திறந்திருக்கிறது. அந்தக் கதவின் ஒரு பக்கம் நிலப்பரப்பைக் கேட்கும் புதின். மறுபக்கம் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கேட்கும் ஜெலென்ஸ்கி. இருவருக்கும் நடுவில் சமரசப் பாதையைத் தேடிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப். இந்த மூன்று கோணங்களும் எங்குச் சந்திக்கின்றன என்பதில்தான் உக்ரைன் போரின் அடுத்த அத்தியாயம் எழுதப்பட இருக்கிறது.
