சிசிடிவியில் கண்காணித்த மாமனாருக்கு நேர்ந்த துயரம்- சினிமா பாணியில் மருமகள் அரங்கேற்றிய பயங்கரம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல மருந்து நிறுவன அதிபர் ஒருவர், தனது படுக்கையறையிலேயே 26 முறை கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலுக்கியுள்ளது.
நள்ளிரவில் மாமனார் வீட்டில் கொலைகாரர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்த அதே நேரத்தில், சொகுசு ஹோட்டலில் தனது கணவருடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த மருமகளே இக்கொலையில் மாஸ்டர் பிரைன் என்பது அம்பலமாகி ஒட்டுமொத்தக் காவல் துறையினரையும் திடுக்கிட வைத்துள்ளது.
கான்பூர் கல்யாண்பூர் பகுதியில் உள்ள 'ரத்தன் ஆர்பிட்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வினீத் மினோச்சா. இவர் தனது மகன் சுப்ரத் மற்றும் மருமகள் ஷாலுவுடன் இணைந்து பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மருந்து நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமை இரவு, வினீத்தின் மகனும் மருமகளும் ஒரு நள்ளிரவு பார்ட்டிக்காக வெளியில் சென்றிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் அவர்கள் வீடு திரும்பியபோது, படுக்கையறையில் வினீத் மினோச்சா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு மகன் அதிர்ச்சியில் உறைந்தார்.
மருமகள் ஷாலுவோ எதுவும் தெரியாதது போல் அலறித் துடித்து மயங்கி விழுந்து நாடகமாடினார். வீட்டில் இருந்த நகைகளோ, பணமோ திருடப்படாததால் இது முழுக்க முழுக்கக் கொலை செய்வதற்காகவே ஏவப்பட்ட கூலிப்படைச் செயல் என்பதைப் போலீசார் மோப்பம் பிடித்தனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வீட்டில் 12 ஆண்டுகள் வேலை செய்து, கடந்த 2022-ல் திருட்டுப் புகாரில் நீக்கப்பட்ட விஷால் கௌதம் தனது நண்பனுடன் நள்ளிரவில் டூப்ளிகேட் சாவி மூலம் உள்ளே நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், விஷால் கௌதம் சொன்ன தகவல் அதிர்ச்சியை கொடுத்தது. மருமகள் ஷாலு 6 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறித்தான் இந்த மாமனார் கொலைக்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தார் என்பது வாக்குமூலத்தின் மூலம் வெளிவந்தது. விசாரணையில், மே 1-ஆம் தேதி முதல் கொலை நடந்த நாள் வரை ஷாலுவும், கொலையாளி விஷாலும் ரகசியமாக 309 முறை வாட்ஸ்அப் கால்கள் மற்றும் மெசேஜ்களைப் பரிமாறிக்கொண்டதும், அதில் 49 சாட்களை ஷாலு அழித்திருந்ததும் சைபர் கிரைம் மூலம் ஆதாரங்களுடன் நிரூபணமானது.
மாமனாரைத் தலையணையால் அமுக்கிக் கொன்று மாரடைப்பு போல் காட்டவே முதலில் திட்டமிட்டனர். ஆனால் வினீத் திடீரென விழித்துக்கொண்டதால் கத்தியால் 26 முறை குத்திக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்துக் கைது செய்யப்பட்ட மருமகள் ஷாலு கூறுகையில், "கோடீஸ்வரக் குடும்பத்தின் மருமகளாக இருந்தும், எனது சிறிய செலவுகளுக்குக் கூட ஒவ்வொரு பைசாவுக்கும் மாமனாரிடம் கெஞ்ச வேண்டியிருந்தது. நான் எப்போது வெளியில் செல்கிறேன், எப்போது வருகிறேன் என்பதை வீட்டிற்குள் சிசிடிவி கேமராக்கள் வைத்து அவர் கடுமையாகக் கண்காணித்து வந்ததால் ஆத்திரத்தில் இந்த முடிவை எடுத்தேன்" என்றார். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)