வடகொரியாவில் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள்; அரசு சார்பில் உருவாகும் பொழுதுபோக்கு இடங்கள்!

1990-களில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்குப் பிறகு வடகொரியாவில் முறைசாரா தனியார் சந்தைகள் வளர்ந்தன.
பொழுதுபோக்கு என்ற வார்த்தைக்கே இடமில்லாத நாடாக அறியப்படும் வடகொரியாவில், மக்களுக்காகப் புதிய கோடைகால ரிசார்ட்டுகள், ஆடம்பர வணிக வளாகங்கள் மற்றும் காபி பார்கள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்துவதுடன், அரசு தனது வணிகக் கட்டுப்பாட்டை இறுக்கும் ஒரு உத்தியாகவே பொழுதுபோக்கு மற்றும் நுகர்வுப் புரட்சியை அதிபர் கிம் ஜாங் உன் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில், வொன்சான் கல்மா கடற்கரையில் ரிசார்ட், சாம்ஜியான் நகரில் புதிய ஹோட்டல்கள், ஸ்கை ரிசார்ட்டுகள் என அரசு சார்பில் பல பொழுதுபோக்கு இடங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பியாங்யாங்கில் திறக்கப்பட்டுள்ள புதிய வணிக வளாகங்களில் ரோலெக்ஸ், ஷானல், அடிடாஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளின் பெயர்கள் மற்றும் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம், இந்த பிராண்டுகளை வைத்துள்ள நிறுவனங்கள், தாங்கள் வடகொரியாவுடன் எந்தவித வணிகத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளது, குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
1990-களில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்குப் பிறகு வடகொரியாவில் முறைசாரா தனியார் சந்தைகள் வளர்ந்தன. தற்போது அரசு சொந்தமாகக் கொண்டுள்ள இந்த வணிகக் கட்டமைப்பு மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் மூலம், மக்கள் தனியாரை நாடுவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
