திறந்து 17 ஆண்டுகள் கடந்தும் பயன்படாத மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் தெரு நாய்களுக்கு புகலிடமாக மாற்றப்படுமா?

கோவை: பத்து கோடி ரூபாயில் 17 ஆண்டுக்கு முன் திறக்கப்பட்ட மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம், இன்னமும் குப்பை கொட்டும் இடமாகவும், திறந்தவெளி கழிப்பிடம் போலவும் பயன்படுத்தப்படுகிறது. பஸ்கள் வருவதில்லை.
ஊட்டி போன்ற வடக்கே உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சாய்பாபா காலனியில் புதிதாக அமைக்கப்பட்டது இந்த பஸ் ஸ்டாண்ட். அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் 2010ல் திறந்து வைத்தார்.
முதல் மூன்று மாதங்கள் பஸ்கள் அனைத்தும் வந்து சென்றன. பின்னர் பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் வேலைகள் நடப்பதை காரணம் காட்டி,போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதாக கூறி பெரும்பாலான பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டுக்குள் வருவது குறைந்தது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்தே அவை இயக்கப்பட்டன.
மேம்பால வேலைகள் முடிந்து அவை திறக்கப்பட்டு விட்டன. ஆனாலும் பஸ்கள் வரவில்லை. பல பஸ்கள் ஸ்டாண்டுக்குள் வராமல், பயணிகளை வெளியிலேயே இறக்கிவிட்டு காந்திபுரம் செல்கின்றன. ஊட்டி,குன்னூர்,கோத்தகிரி செல்லும் பயணிகள் காந்திபுரம் சென்று எல்லா ஊர் பயணிகளோடும் முட்டி மோதும் நிலை தான் நீடிக்கிறது.
நான்கு பஸ் நிலையங்கள் உள்ளதால், எல்லா நேரமும் நெரிசலில் சிக்கி தவிக்கும் காந்திபுரத்தில் போக்குவரத்தை சீராக்கவு மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தலாம் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் அப்படி ஒரு எண்ணம் அதிகாரிகளுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே, தெரு நாய்களுக்கு புகலிடமாக பஸ் ஸ்டாண்டை மாற்றி, நாட்களுக்கு கருத்தடை செய்வது, நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என விலங்கு ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
அரசு பரிசீலனை செய்து விரைவாக முடிவு எடுத்தால் நல்லது.