துார்வாரும் பணிக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக புகார்

சென்னை: பருவ மழைக்கு முந்தைய துார்வாரும் பணிக்கான டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக, நீர்வளத் துறையில் சலசலப்பு எழுந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன்பாக, இம்மாவட்டங்களில் உள்ள அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பகிங்ஹாம் கால்வாய், வெள்ளாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு, இப்பணிகளை மேற்கொள்ள, 42 கோடி ரூபாயை, நீர்வளத் துறைக்கு அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியில், ஐந்து மாவட்டங்களில், 202 இடங்களில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
'ஆன்லைன்' வாயிலாக தகுதியான ஒப்பந்ததாரரை தேர்வு செய்து பணி வழங்க, நீர்வளத் துறை செயலர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் வாயிலாக, ஆன்லைன் முறையில் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறைந்த தொகைக்கு டெண்டர் கேட்ட நிறுவனங்களுக்கு பதிலாக, அ.தி.மு.க., - பா.ஜ., ஆதரவு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, நீர்வளத் துறை செயற்பொறியாளர் ஒருவர் கூறியதாவது: ஆன்லைன் டெண்டர் என்பதால், பணியை எடுப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. டெண்டர் பணி எடுப்பதற்கு பல்வேறு தகுதிகளும் நிபந்தனைகளாக விதிக்கப்பட்டு இருந்தன. குறைந்த விலையை குறிப்பிட்டு, பணியை எடுக்க பல நிறுவனங்கள் முன்வந்தன.
ஆனால், டெண்டரின் மற்ற தகுதிகளை, அவர்கள் பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக, இயந்திரங்கள், வேலையாட்கள், லாரிகள் உள்ளிட்ட கையிருப்பு குறித்தும், பணி அனுபவம் குறித்தும் தகவல்களை மறைத்துள்ளனர்.
இதனால், குறைந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டாலும், பணி வழங்க முடியவில்லை. விதிகளை முறையாக பின்பற்றிய நிறுவனங்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டு உள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் பணிகளை, நீர்வளத் துறை மட்டுமின்றி, தனியார் தன்னார்வலர்கள் வாயிலாகவும், உளவுத்துறை வாயிலாகவும், அரசு கண்காணித்து வருகிறது. இதனால், டெண்டரில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.