கறி விருந்துக்கு அழைத்து வாலிபர் குத்திக் கொலை இருவர் கைது
தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில், நண்பரின் மனைவியுடன் தொடர்ந்து அலைபேசியில் பேசிய வாலிபரை, கறி விருந்துக்கு அழைத்து மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சாம்பவர் வடகரையைச் சேர்ந்த சத்யன் 35, குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் வசித்தார். இவர் சாம்பவர் வடகரையில் உள்ள தனது நண்பர் சுப்பிரமணியின் மனைவியுடன் தொடர்ந்து அலைபேசியில் பேசியுள்ளார்.
இந்நிலையில், நண்பரின் திருமண விழாவில் பங்கேற்க சொந்த ஊருக்கு வந்த சத்யனை, சுப்பிரமணி கண்டித்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து திருமண வீட்டில் நடந்த கறி விருந்துக்கு சத்யனை சுப்பிரமணி அழைத்தார். இதை நம்பி கறி விருந்துக்கு சென்ற சத்யன், சுரண்டை சாலையில் உள்ள மயான காத்திருப்பு கூடத்தில் சுப்பிரமணி, கருப்பசாமி உள்ளிட்டோருடன் மது அருந்தினார்.
அப்போது, கூட்டாளிகளுடன் இணைந்து மதுபாட்டிலால் சத்யனின் தலையில் சுப்பிரமணி தாக்கினார். இதில் சத்யன் உயிரிழந்தார். சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சுப்பிரமணி, கருப்பசாமி ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.