Crime, law and justice
தமிழக லோக் ஆயுக்தா செயலராக மாவட்ட நீதிபதியை நியமிக்கலாம் அரசாணைக்கு ஐகோர்ட் ஓகே
சென்னை: 'தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் செயலராக, பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க, தமிழக அரசு கொண்டு வந்த திருத்தம் செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, மத்திய அரசு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை, 2013ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018ம் ஆண்டு இயற்றப்பட்டு, 2018 நவம்பர் முதல் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, தஞ்சாவூரை சேர்ந்த வி.ஜீவகுமார் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். மனுவில், 'லோக் ஆயுக்தா சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை.
லோக் ஆயுக்தா செயலராக, துணை செயலர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்க கூறியுள்ள நிலையில், ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலராக நியமிக்கும் வகையில், விதிகளை திருத்தி 2020ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது, மத்திய அரசு சட்டத்தை மீறிய செயல் என்பதால், அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்ட பிரிவு 9 (1) என்பது, அதிகாரப்பூர்வ பணிமூப்பு மற்றும் தகுதிக்கான குறைந்தபட்ச வரம்பை மட்டுமே நிர்ணயிக்கிறது.
இந்த தகுதியை பூர்த்தி செய்யும் அல்லது அதற்கு மேல் தகுதி கொண்ட நீதித் துறை அதிகாரிகளை நியமிப்பதற்கு, எவ்வித தடையையும் விதிக்கவில்லை.
அயல் பணி அல்லது ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட நீதிபதிகளை லோக் ஆயுக்தா செயலராக நியமிப்பது, முதன்மை சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் பொருந்துகிறது.
மாநில நீதித்துறை சேவையில் உள்ள மாவட்ட நீதிபதிகள், அரசின் துணை செயலருக்கு இணை அல்லது அதற்கு மேலான தகுதி, பதவியை கொண்டவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், இந்த விதிகளை உருவாக்க, மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
