Lifestyle and human interest
பால் கூட்டுறவு சங்க நிலத்தை போராடி தக்க வைத்த மக்கள்
வடமதுரை:வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிலம் தவறுதலாக இருவரது பெயரில் பதிவாகி இருந்ததை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து சங்க பெயரில் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு 1983ல் 50 சென்ட் இடம் விலைக்கு வாங்கி கட்டடம் கட்டி 1987ல் திறக்கப்பட்டது. சங்க கட்டடம் பழமையாகவே 2022ல் 100 நாள் வேலையுறுதி திட்டத்தில் ரூ.16.46 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதற்கு மின்இணைப்பு பெற பட்டா நகல் பெற்ற போது 20 சென்ட் நிலம் குறைவாக இருந்ததும், அந்த நிலம் 2007ல் அதே பகுதி இருவர் பெயரில் முறைகேடாக பட்டாவாக பதிவாகி இருந்ததும் தெரிந்தது.
இதை ரத்து செய்ய வலியுறுத்தி 2023ல் மனு தந்து தாசில்தார், ஆர்.டி.ஓ., விசாரணை முடிந்து டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் கிடப்பில் இருந்தது. இப்பிரச்னையால் புதிய கட்டடமும் 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் பயனற்று கிடந்தது. அரசு சொத்திற்கே இந்த நிலையா என விரக்தியான மக்கள் மறியல் போராட்டம் அறிவித்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டது. இதையடுத்து கவனம் செலுத்திய மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்தியது. தவறுதலாக இருந்த பெயர்களை நீக்கி முழு நிலத்திற்கும் கூட்டுறவு சங்க பெயரில் பட்டா வழங்கி நடவடிக்கை எடுத்தது.