Politics
இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாக்., கடற்படை கப்பல்; மத்திய அரசு கண்டனம்

புதுடில்லி: சர்வதேச கடற்பகுதியில் இந்திய கடற்படை கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதிய சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; சர்வதேச கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
பாகிஸ்தான் படையின் இந்த செயல், 1991ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ராணுவப் பயிற்சிகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு ஒப்பந்தத்தின் 10வது பிரிவுக்கு முரணானது. இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் பாகிஸ்தான் பார்த்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு, இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது.