Politics
இந்திய கப்பலை மோதிய பாகிஸ்தான் கப்பல்: "இஸ்லாமாபாத்திடம் 'இதை' சொல்லுங்க" - இந்திய அரசு எச்சரிக்கை
சர்வதேச கடற்பகுதியில் நடந்த கப்பல் மோதலில் பெரிய சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கடற்படையின் செயல்பாட்டை இந்தியா கண்டித்தது|Indian and Pakistani naval units collided in the North Arabian Sea, prompting India to summon Pakistan’s diplomat and lodge a strong protest.

வடக்கு அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய நிலையில், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேற்று (செப்டம்பர் 15) மாலை, வழக்கம் போல, வடக்கு அரபிக்கடலில் இந்தியக் கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்று ரோந்துப் பணியில் இருந்திருக்கிறது.
அப்போது அந்தக் கப்பலை நோக்கி வேகமாக பாகிஸ்தான் கப்பற்படைக் கப்பல் ஒன்று வந்துள்ளது. பாகிஸ்தான் கப்பலின் வேகத்தால் இரண்டு கப்பல்களும் மோதிக்கொண்டுள்ளன.
ஆனால், இந்த விபத்தில் இரு கப்பல்களுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் கப்பல் தொழில்முறையை ஒத்து இயக்கப்படாததாலும், பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்பட்டதாலும்தான் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
தகவல்களின் படி, இந்த மோதலில் சம்பந்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கப்பல் ‘பிஎன்எஸ் ஹுனைன்’. இது பாகிஸ்தான் கடற்படையின் ‘யார்மூக்’ வகையைச் சேர்ந்த ஒரு ரோந்துப் போர்க்கப்பல் ஆகும்.
இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தானிடம் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது இந்திய வெளியுறவுத் துறை.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
“டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் இடைக்காலத் தூதர் இன்று இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அவரிடம் இந்தியக் கடற்படைக் கப்பலுடன் மோதலுக்கு வழிவகுத்த பாகிஸ்தான் கடற்படையினரின் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற செயல்பாடு குறித்து கடுமையான கண்டனம் பதிவு செய்யப்பட்டது.
சர்வதேசக் கடல்பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தால் பெரிய அளவில் எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் இந்தச் செயல்பாடு, 1991 ஏப்ரலில் கையெழுத்தான ‘இராணுவப் பயிற்சிகள், நகர்வுகள் மற்றும் படைகளின் இடப்பெயர்வு குறித்த முன்அறிவிப்புக்கான இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தத்தின்’ பிரிவு 10-க்கு முற்றிலும் எதிரானதாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, அனைத்து இராணுவப் பிரிவுகளும் தகுந்த கவனத்துடனும், இருதரப்பு ஒப்பந்த விதிகளுக்கு மதிப்பளித்தும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் இடைக்காலத் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேபோன்ற கண்டனப் பதிவை இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் வெளியுறவு அமைச்சகத்திடமும் பதிவு செய்யுமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய இடைக்காலத் தூதருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது”. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
