Politics
மாநகராட்சிகள் கலைப்பு? த.வெ.க., அரசு அதிரடி திட்டம்!
- நமது நிருபர் - தமிழகத்தில் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளை நியமிக்க த.வெ.க., அரசு

தமிழகத்தில் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளை நியமிக்க த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்தும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் த.வெ.க.,வுக்கு கவுன்சிலர்கள் இல்லாததால், இன்னும் தி.மு.க., ஆட்சி போல காட்சிகள் நடக்கின்றன. ஆட்சியை இழந்தாலும், உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க., வலுவாக இருப்பதால் தோல்வியிலும் உத்வேகமாக செயல்படுகிறது.
இதன் தாக்கம், சட்ட சபையில் எதிரொலிப்பதாக த .வெ.க., நம்புவதால், தி.மு.க.,வுக்கு 'செக்' வைக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், மார்ச் வரை இருந்தாலும், மாநகராட்சிகளை மட்டும் முன்கூட்டியே கலைக்க த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து, த.வெ.க., கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்பது ஆளுங்கட்சியின் கணக்கு. அதன்பிறகு, ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, சட்டசபையில் போல, உள்ளாட்சியிலும் வெற்றி பெறலாம் என த.வெ.க., திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து த.வெ.க., வினர் கூறியதாவது: த.வெ.க.,வின் அடுத்த இலக்கு உள்ளாட்சி தேர்தல் வெற்றி. மாநகராட்சி, நகராட்சிகளில் தி.மு.க.,வினர் நடத்திய ஊழல்களை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க த.வெ.க., தயாராகி வருகிறது.
அதனால் தான், நகராட்சி துறை டெண்டர்கள் முறைகேடு புகார் மீது அதிக கவனம் செலுத்துகிறது. ஊழல் புகார் காரணமாகவே, மாநகராட்சிகள் கலைக்கப்பட்டன என்ற தேர்தல் வியூகம் த.வெ.க.,வுக்கு கைகொடுக்கும்.
இது குறித்து, முதல்வர் விஜயின் கவனத்துக்கு த.வெ.க., மூத்த அமைச்சர்கள் கொண்டு சென்றுள்ளனர். முதல்வர் இறுதி முடிவு எடுப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
