உலக ‘கை மல்யுத்தம்’ போட்டியில் பங்கேற்க நிதி ஆதாரம் இன்றி மாற்றுத்திறனாளி தவிப்பு
பொன்னேரி, செப். 5– டெல்லியில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கை மல்யுத்தம் போட்டியில்

டெல்லியில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கை மல்யுத்தம் போட்டியில் பங்கேற்பதற்கு, போதிய நிதி ஆதாரம் இல்லாமல் தவித்து வருவதாக, மாற்றுத்திறனாளி கை மல்யுத்த வீராங்கனை கவிதா வேதனை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்தவர் கவிதா, 39. மாற்றுத்திறனாளி. இவர் ‘ஆம் ரெஸ்லிங்’ எனப்படும் கை மல்யுத்த வீராங்கனை.
பல்வேறு கை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை பெற்றுள்ளார். கடந்த மே மாதம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சார்பில், குஜராத்தில் நடந்த தேசிய கை மல்யுத்த போட்டியில் பங்கேற்று, தங்கம் வென்றார். அதை தொடர்ந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இதற்கான போட்டி, வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க நுழைவு கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு கட்டணம், போக்குவரத்து செலவினங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், நிதியுதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இது குறித்து, கை மல்யுத்த வீராங்கனை கவிதா கூறியதாவது:
என்னுடன் இதே போட்டியில் பங்கேற்கும் மற்றொரு கை மல்யுத்த வீரருக்கு, அரசின் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. எனக்கு கிடைக்கவில்லை.
கணவரின் வருவாய், குடும்ப செலவிற்கே போதுமானதாக இல்லை. மாற்றுத்திறனாளியான எனக்கு, இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.
ஆனால், பொருளாதார வசதி தான் இல்லை. அரசு நிதயுதவி செய்தால், சாதனை புரிவேன். அரசின் நிதியுதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.