Crime, law and justice
போக்சோ வழக்கில் துாக்கு தண்டனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
மதுரை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 5 சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவான போக்சோ வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மருதிபட்டியை சேர்ந்தவர் சந்திரன் 45.விறகு வெட்டும் தொழிலாளி. திருமணம் ஆனவர். மகளின் பிரசவத்திற்காக சந்திரனின் மனைவி, மகள் வீட்டிற்கு சென்றார். 2024 பிப்.,4ல் ஒரு சிறுமியிடம், 'அலைபேசியில் வீடியோ கேம் விளையாடலாம்' எனக்கூறி சந்திரன் அழைத்தார்.
அதுபோல, மேலும் 4 சிறுமிகளை அழைத்தார். தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட பணம் தருவதாகக்கூறி வெவ்வேறு நாட்களில், தன் வீட்டிற்கு அழைத்து 5 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக திருப்புத்துார் மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிந்தனர்.
விசாரித்த சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் 2026 ஏப்ரலில் பிறப்பித்த உத்தரவு: சிறுமியரை மிரட்டியதற்கு 2 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், முதல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.1000 அபராதம், மற்ற நான்கு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்ததற்கு 4 ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
ஐந்து சிறுமியரையும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 5 துாக்கு தண்டனைகள், ஒட்டுமொத்தமாக ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியரின் குடும்பத்திற்கு தலா ரூ. 7 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சந்திரன் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசன்னா ராஜதுரை ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 5 சிறுமிகளும் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அச்சிறுமிகளின் பெற்றோருக்கும், மனுதாரருக்கும் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் முன்விரோதம் இருந்துள்ளது. இதற்காக பழிவாங்கும் உள்நோக்கில் மனுதாரருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் புகார் அளித்துள்ளனர்.
மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டை அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கத்தவறிவிட்டது. கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை மதுரை மத்திய சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
