“நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்க தடை..” தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்...

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது என கூறியும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரசாந்த ஹர்கவா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 38 மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவை தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பிளாஸ்ட் ஆஃப் பாரிசில் செய்யப்பட்ட சிலைகளை தடுக்கும் வகையில், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகியன சிலைகள் கரைப்பதற்கான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. நீலாங்கரை மட்டும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் ஆமைகள் இனப்பெருக்கம் நடைபெறுவதாகவும், இந்த பகுதிகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதிகளாக உள்ளதால், அங்கு சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: 30 ஆண்டு நட்பும் போட்டியும்.. விஜய் - அஜித் எனும் நட்சத்திர பிம்பங்கள்.. லண்டனில் நடக்கும் சுவாரஸ்யம்!
அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை பகுதிகளுக்குச் செல்லும் சிலைகள் மற்ற பகுதிகளுக்கு ஏன் மாற்றிவிடக் கூடாது என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், மற்ற பகுதிகளுக்கு மாற்றுவதைப் பொருத்தவரை, சட்டம் ஒழுங்கு, கூட்ட நெரிசல், மத ரீதியாக பதற்றமான பகுதிகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதுசம்பந்தமாக அதிகாரிகள் உடன் கலந்துபேசி, முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என்றும், இந்த இரண்டு இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை மற்ற 4 இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து செப்டம்பர் 16-ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்தப் பகுதிகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.
