Sport
மாவட்ட கோ- - கோ போட்டியில் அசோக் நகர் அரசு பள்ளி சாம்பியன்

சென்னை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான கோ - -கோ போட்டியில், அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
சென்னை மாவட்ட அளவில், பள்ளிகளுக்கு இடையே முதல்வர் கோப்பைக்கான கோ - கோ போட்டி, கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன.
இதில், தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசோக் நகர் அரசு பள்ளி மாணவியர், காலிறுதி, அரையிறுதி என, அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இறுதிப்போட்டியில், முகப்பேர் வேலம்மாள் மேற்கு பள்ளியுடன் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில், போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அசோக் நகர் அரசு பள்ளி மாணவியர், 5 - 2 என்ற புள்ளிக்கணக்கில் முகப்பேர் வேலம்மாள் மேற்கு பள்ளியை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.