Politics
ஒரே பைக்கில் சென்ற 3 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் விஜய் நிவாரணம் அறிவிப்பு

தனியார் கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 3 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சக்கரம்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த சேகரின் மகள்களான சுபிதா, நிவேதா, தனுஸ்ரீ மற்றும் சுபிதாவின் சித்தப்பா மகள் அபிநயா ஆகிய 4 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு–ராசிபுரம் மாநில நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். சக்கரம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே தங்களது ஊருக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை வலதுபுறம் திருப்பியபோது, எதிரே வந்த கல்லூரி பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த தூக்கி வீசப்பட்டு சுபிதா மற்றும் அபிநயா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிவேதா மற்றும் தனுஸ்ரீ ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் 03.09.2026 அன்று மாலை, கல்லூரியில் பயின்றுவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி சுபிதா (வயது 19), த/பெ. சேகர் என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான செல்வி நிவேதா (வயது 17), த/பெ. சேகர், செல்வி தனுஸ்ரீ (வயது 13), த/பெ. சேகர் மற்றும் செல்வி அபிநயா (வயது 12), த/பெ. ரமேஷ்பாபு ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது, தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் செல்வி நிவேதா, செல்வி தனுஸ்ரீ மற்றும் செல்வி அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், செல்வி சுபிதா என்பவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு முதல்வர் விஜய் மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
