Economy, business and finance
ரேடியல் சாலையில் 12 ஏக்கர் நிலம் ரூ.1,020 கோடிக்கு விற்பனை: ஜி.சி.சி., காரிடராக உருவெடுக்கிறது

சென்னை: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மைய வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு, 12 ஏக்கர் நிலத்தை, 1,020 கோடி ரூபாய்க்கு கே.எல்.ஏ., டென்கார் நிறுவனம் வாங்கியுள்ளது.
சென்னையில், மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான பழைய மாமல்லபுரம் சாலை, தகவல் தொழில்நுட்ப வழித்தடமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப, இந்த வழித்தடத்தில் பல்வேறு ஐ.டி.,நிறுவனங்கள் வந்துள்ளன.
இந்நிலையில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் வருகை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக, ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மையங்கள் அமைப்பதில், பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.
இதன்படி, இந்த சாலையை ஒட்டிய பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களில் ஜி.சி.சி., மையங்கள் வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த சாலை ஜி.சி.சி., வழித்தடமாக மேம்படுப்படுத்தப்படும் என, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் அறிவித்தார்.
இந்த பின்னணியில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஜி.சி.சி., மையம் அமைப்பதற்காக கே.எல்.ஏ., டென்கார் சாப்ட்வேர் இந்தியா நிறுவனம், 12 ஏக்கர் நிலத்தை, 1,020 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்த நிலத்தை செமி கன்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க பயன்படுத்த போவதாக கே.எல்.ஏ., நிறுவனம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக தமிழக அரசுடன் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிலையில் தற்போது ஜி.சி.சி. மையம் அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.