மீண்டும் லாக்கப் சித்ரவதை! -உயிருக்குப் போராடும் இளைஞர்!

சேலம் அருகே, கொள்ளை வழக்கில் கைதான வாலிபரை, ஆசனவாயில் லத்தியை விட்டு தாக்கியதாலும், வயிற்றில் சரமாரியாக உதைத்ததாலும் பெருங்குடல் கிழிந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சித்தன் பட்டிகுட்டையைச் சேர்ந்தவர் பழனிவேல். விவசாயி. கடந்த ஜூலை 18-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் இவருடைய வீட்டிற்குள், ஹெல்மெட், முகமூடி யணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று புகுந்தது. கத்தி முனையில், அவர்கள் அணிந்திருந்த 11 பவுன் நகைகள், வீட்டிலிருந்த 1 லட்ச ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இதே கும்பல், அடுத்த 10 நிமிடத்தில், பக்கத்து ஊரான செந்தாரப்பட்டி மண்மலை பாலக்காட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் வீட்டிற்குள் நுழைந்தது. அவரும், அவர் மனைவி, மகன் மட்டுமே இருந்தனர். அவர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த கும்பல், ஐந்தரை பவுன் நகைகள், 50,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பினர்.
முன்னதாக சந்திரன் என்பவர் வீட்டிலும் கொள்ளையடிக்க முயன்றபோது, அவர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக கெங்கவல்லி, தம்மம்பட்டி போலீசார் ஜூலை 19-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், செந்தாரப்பட்டியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் ரவிச்சந்திரன் மகன்கள் சஞ்சய், சந்துரு, உறவினர் மகன் ரகுநாத், இவர்களின் கூட்டாளிகளான கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, திருச்சி பொன்மலையைச் சேர்ந்த அலெக்சாண்டர் சாம்சன், திருச்சி விஜய் உள்ளிட்ட 7 பேரை கைதுசெய்தனர். இவர்கள் அனைவர்மீதும் ஆக. 18-ஆம் தேதி குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இவர்களில் சஞ்சய் என்ற வாலிபரை போலீசார், கொடூரமாக கொலைவெறி யுடன் அடித்துச் சித்ரவதை செய்ததாக அவருடைய பெற்றோர் கண்ணீர்விட்டுக் கதறித் துடித்தனர்.
இதுதொடர்பாக சஞ்சயின் தந்தை ரவிச்சந்திரன் நம்மிடம் பேசினார். ''தம்மம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு திருச்சி, கரூர் மாவட்டங்களிலிருந்து காளை மாடு களை ஓட்டிவந்த அலெக்சாண்டர் சாம்சன் உள்ளிட்டோருடன் என் மகன்கள் சஞ்சய், சந்துரு, அக்கா மகன் ரகுநாத் ஆகியோருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அலெக்சாண்டர் அடிக்கடி ஊருக்கு வந்துசெல்வார்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அவர் தன் காதலியுடன் வீட்டைவிட்டு எங்கள் ஊருக்கு ஓடிவந்து விட்டார். அவர்களுக்கு என் மகன்கள் ரகு நாத்தின் வீட்டில் அடைக்கலம் கொடுத்தனர். ஒரு மாதம் இங்குதான் தங்கியிருந்தனர். கொள்ளை நடந்ததாகச் சொல்லப்படும் நாளன்று அலெக்சாண்டர் திருச்சி, கரூரிலுள்ள தனது நண்பர்களை வரவழைத்து கொள்ளையில் ஈடுபட்டுள் ளார். இதில் என் மகன் களுக்கு சம்பந்தமில்லை. ஆனால் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத் தில், எந்தெந்த வீட்டில் வயதானவர்கள் மட்டும் இருப்பார்கள், சி.சி.டி.வி. கேமரா இல்லாத பகுதிகள் குறித்து என் மகன்கள்தான் ஐடியா கொடுத்ததாக பொய் வாக்குமூலம் கூறியுள்ளார்.
அதன்பேரில் தம்மம்பட்டி போலீசார் என் மகன்களையும் கைதுசெய்தனர். மூத்த மகன் சஞ்சயை, தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து 4 டீம் போலீசார் மிருகத்தனமாக தாக்கியுள்ளனர். தலைகீழாக கட்டித் தொங்க விட்டும், தரையில் கால்களை விரிக்கவைத்து அவற்றின் மீது போலீசார் ஏறி நின்றும் லத்தியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
சஞ்சயின் கண்களைக் கட்டி, தண்ணீர் டிரம்முக்குள் தலையை முக்கி எடுத்து அடித்திருக்கிறார்கள். ஆசனவாயில் லத்தியை உள்ளேவிட்டு ஈவிரக்கமின்றி அடித்ததில், மலத்துவாரம் கிழிந்து ரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கிறது. தொண்டைக்குழி வரை துப்பாக்கியை வைத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியுள்ளனர். அந்த போலீஸ் நிலையத்திற்கு வந்துபோன போலீசாரெல்லாம் கால்பந்து உதைப்பதுபோல பூட்ஸ் கால்களால் என் மகனை வயிற்றிலும் நெஞ்சிலும் எட்டி உதைத்துள்ளனர்.
என் மகனை மூன்று நாட்கள் சட்டவிரோதமாக போலீஸ் நிலையத்தில் அடைத்துவைத்து டார்ச்சர் செய்துள்ளனர். நியாயம் கேட்கச்சென்ற என்னையும் எஸ்.ஐ. ஒருவர் பளார் பளாரென அறைந்தார். இன்ஸ்பெக்டர் அழகுராணி அவமரியாதையாகப் பேசி என்னை கீழே தள்ளி விட்டார்.
சேலம் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டி ருந்தபோது, அவனுக்கு தொடர்ந்து மலத்தில் ரத்தம் வெளியேறியபடி இருந் துள்ளது. உடல்நிலை மோச மானதால் ஆக. 24-ஆம் தேதி முதல் ஜி.ஹெச். ஸ்ட்ராங் ரூமில் வைத்து சிகிச்சை யளித்தனர். ஒரே மாதத்தில் 25 கிலோ வரை எடை குறைந்துள்ளது. செப். 4-ஆம் தேதி பொது வார்டுக்கு மாற்றியுள்ளனர். கடும் வயிற்று வலியால் அவதிப்படுகிறான். எது சாப்பிட்டாலும் உடனே வாந்தி வந்துவிடுகிறது. என் மகன் ஆபத்தான நிலையில் இருக்கிறான். சஞ்சய் தப்பு செய்திருந்தால் சட்டப்படியான தண்டனை கிடைக்கட்டும். எதற்காக போலீசார் தாக்கவேண்டும்? எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கு நீதியே கிடைக்காதா?'' என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுதார் ரவிச்சந்திரன்.
சஞ்சய், சந்துரு ஆகியோருக்கு இதற்கு முன்பு குற்றப் பின்னணி ஏதுமில்லை. ஆனாலும், அவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்திருக்கிறது. அறிவுரைக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தும்போது சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் போலீசார் இப்போது தீவிர சிகிச்சையளிக்க முனைப்பு காட்டுவது தெரியவருகிறது. குற்றுயிரும் குலையுயிருமாக சஞ்சய் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். போலீசார் இன்னும் கொஞ்சம் மூர்க்கமாக தாக்கியிருந்தால் சேலத்திலும் ஒரு சாத்தான்குளம் சம்பவம் நடந்திருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
மருத்துவப் பரிசோதனை அறிக்கையை நாம் ஆய்வு செய்ததில், சஞ்சயை போலீசார் தாக்கியதில் அவருக்கு பெருங் குடல், சிறுகுடல், ஆசன வாயின் உட்புறத்தில் காயங்களும், வீக்கமும் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு, கிரேடு 2 ஹெமராய்டு மற்றும் பெருங்குடல் அழற்சி (பான்காலிட்டிஸ்)
பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பரிசோதனை அறிக்கை கூறுகிறது. ஆசனவாய் வழியாக கேமரா பொருத்தப்பட்ட உபகரணம் மூலம் கொலோனோஸ்கோப்பி பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை தரப்பில் விசாரித்தோம். ''தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் பிடிபட்டவர்களுள் ஒருவனான அலெக்சாண்டர் சாம்சனை,
ஏற்கனவே ஒரு வழக்கில் போலீசார் காலில் சுட்டுப்பிடித்துள்ளனர். அவன் மீது 14-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளன. அவனுக்கு உள்ளூரில் கொள்ளையடிக்க திட்டம் வகுத்துக்கொடுத்ததே சஞ்சய்தான். சஞ்சயின் தாயார் துபாயில் வேலைக்குச் சென்ற இடத்தில் ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டபோது இதே போலீசார்தான் மீட்டுக் கொண்டுவந்தோம். இப்போது சஞ்சயை அடித்துக் கொல்லப்பார்ப்பதாக அவனுடைய பெற்றோர் போலீசார் மீதே பழிபோடுகின்றனர். குற்றவாளிகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது'' என்று போலீசார் காட்டமாகக் கூறினர்.
இதற்கிடையே, சேலம் மாவட்ட எஸ்.பி., குத்தாலிங்கம், தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் அழகுராணி, போலீசார் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரளித்திருக்கிறார் சஞ்சயின் தந்தை ரவிச்சந்திரன்.
இதுபற்றி தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் அழகுராணியிடம் கேட்டபோது, ''சஞ்சய் தொடர்புடைய வழக்கில் இன்னும் முழுமையான விசாரணை முடியவில்லை. அவரை நாங்கள் டார்ச்சர் செய்யவும் இல்லை. ஒரு தற்கொலை வழக்கு குறித்த விசாரணையில் இருக்கிறேன். நேரில் வாருங்கள் பேசலாம்'' என்றார் சுருக்கமாக.
ஆய்வாளர் அழகுராணி, வழக்கின் விசாரணை முடியவில்லை என்று நம்மிடம் கூறுகிறார். இந்நிலையில், சஞ்சய் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தை ஏவியிருப்பது முரணாக இருக்கிறது. இதுதொடர்பாக, சேலம் மக்கள் கண்காணிப்பக பொறுப்பாளர் வழக்கறிஞர் அசோகனிடம் கேட்டபோது, "குற்ற வழக்கில் கைதுசெய்யப்படும் ஒருவரை எந்தக் காரணம் கொண்டும் போலீசார் அடிக்கக்கூடாது. கஸ்டோடியல் டார்ச்சர் செய்வது சட்டப்படி குற்றம். மனித உரிமைமீறல். அறிவியல்பூர்வமாக விசாரித்து உண்மைகளை வரவழைக்கலாம். காவல்நிலைய சித்ரவதையை நியாயப்படுத்தினால், அப்பாவிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது'' என்றார்.
போலீசாரே சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு, விசாரணை என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது வன்முறையை பிரயோகிப்பதும் குற்றமே.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)