நாய்க்கு கறி போட்டதை தட்டிகேட்டதால் ஆத்திரம்: வாலிபரை கடித்தவருக்கு வலை
வியாசர்பாடி: நாய்க்கு, சமைக்காத கோழிக்கறி கால்களை போட்ட நபரை தட்டிக் கேட்ட, 48 வயது நபரை தொடையில் கடித்த, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர், செய்யூர் பார்த்தசாரதி தெரு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு, 48. இவர் செப்.7 இரவு 11:00 மணியளவில், வியாசர்பாடி பி.பி. சாலை 4வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தெரு நாய்களுக்கு, சமைக்காத கோழிக்கறி கால்களை உணவாக தந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த ரமேஷ்பாபு, ‛நாய்களுக்கு சமைக்காத கறிவகைகளை தர வேண்டாம்' என கூறியுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், நாய்களுக்கு கறி போட்ட நபர், ரமேஷ் பாபுவை கீழே தள்ளி விட்டு, அவரது வலது தொடை பகுதியில் கடித்தார்.
வலி தாங்க முடியாத நபர் அலறிய நிலையில், நாய்களுக்கு கறி போட்டவர் அங்கிருந்து ‛எஸ்கேப்' ஆனார். காயமடைந்த ரமேஷ்பாபு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வியாசர்பாடி போலீசார், வழக்குபதிவு செய்து, ரமேஷ்பாபுவை கடித்த நபரை தேடி வருகின்றனர்.