Politics
“திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” - அநாகரீக பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ஆ.ராசா!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். இதில் முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று (12-09-26) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, மிசா குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது அமைச்சர் நிர்மல்குமாரை இழிவுப்படுத்தும் விதமாக ஆபாசமாக பேசினார். அதில் பேசிய ஆ.ராசா, “ஒரு மந்திரி இருக்கிறார். அவர் மந்திரியா? எங்கே படித்தார் என்னவென்று தெரியவில்லை. குரங்கு மரத்துக்கு மரம் தாவுகிற மாதிரி கட்சிக்கு கட்சி தாவி தாவி இங்கு உட்கார்ந்திருக்கிறார். அவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை என்கிறார். எனக்கும் தான் ஒரு சந்தேகம் இருக்கிறது, நீ யாருக்கு பொறந்தே என்று?” என்று பேசினார். இந்த ஆபாசப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆ.ராசா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தை - உண்மையை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் பொய் என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம் செய்ததால் ஏற்பட்ட வலியை உணர்த்த ஏளனம் செய்தவரின் அடையாளத்தை, உண்மையை உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான். என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)