முடங்கிய பெங்களூரு விரைவு சாலை திட்டத்திற்கு... புது டெண்டர்!ரூ.633 கோடியில் அரக்கோணம் - பரந்துார் வரை பணி

காஞ்சிபுரம்: ஒப்பந்ததாரர் ஓட்டம் பிடித்ததால், சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலையில், ஓராண்டுக்கு மேலாக முடங்கியுள்ள அரக்கோணம் - காஞ்சிபுரம் பரந்துார் இடையிலான, 25.5 கி.மீ., சாலை பணிகளை மீண்டும் தொடங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 633.12 கோடி ரூபாக்கு புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளை, 18 மாதங்களில் முடிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின், 'பாரத்மாலா' திட்டத்தின் கீழ், சென்னை - பெங்களூரு விரைவு சாலை மேம் படுத்தப்பட்டு வருகிறது. இந்த விரைவு சாலை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் நுழைந்து, காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் வரை செல்கிறது.
25.5 கி.மீ., சாலை விரைவு சாலை திட்டத்தின் மூன்றாவது பகுதியாக, தமிழகத்தில் அரக்கோணம் - காஞ்சிபுரம் பரந்துார் வரை, 25.5 கி.மீ., நீளத்திற்கு இந்த சாலை அமைக்கப்படுகிறது.
இதில், 17.4 கி.மீ., ராணிப்பேட்டை மாவட்டத்திலும், 8.1 கி.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. அரக்கோணம் தாலுகாவில் கர்ணவூர் அருகே தொடங்கும் இந்த சாலை, காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பரந்துார் வருவாய் கிராமம் அருகே முடிகிறது.
சாலை பணிக்கு ஒப்பந்த பெற்ற தனியார் நிறுவனம், 2022 ஆகஸ்டில் பணிகளை தொடங்கியது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, 2025 மே மாதத்தில் பணிகளை, தனியார் நிறுவனம் கைவிட்டு, ஓட்டம் பிடித்தது.
பணிகளில், 53 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவர, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்றதால், புதிய ஒப்பந்ததாரரை நியமிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
மீண்டும் டெண்டர் இந்நிலையில், மீதமுள்ள பணிகளை முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. அரக்கோணம் - காஞ்சிபுரம் இடையே, 25.5 கி.மீ., பெங்களூரு - சென்னை விரைவு சாலையின் நிலுவைப் பணிகள்' என்ற அடிப்படையில், 633.12 கோடி ரூபாய்க்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் புதிய ஒப்பந்த நிறுவனம், 18 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். பணிகள் முடிந்த பின், 5 ஆண்டுகள் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
டெண்டர் ஆவணங்கள் செப்., 1 முதல் செப்., 28 வரை பதிவிறக்கம் செய்யலாம். ஒப்பந்த நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் டெண்டர்களை, செப்., 29 காலை 11:30 மணிக்கு திறக்கப்படும் என, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே மேம்பாலம் இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறிய தாவது:
சாலை திட்டத்தின் பழைய திட்ட மதிப்பு, 1,525 கோடி ரூபாய். கடந்தாண்டு மே மாத நிலவரப்படி, 53.6 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளுக்குத்தான், 633.12 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விடுபட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மட்டுமின்றி, ஒன்பது மேம்பாலங்கள், ஒரு ரயில்வே பாலம், இரண்டு சிறிய பாலங்கள், 18 சுரங்கப்பாதைகளும் அமைக்கபட உள்ளன. விடுபட்ட சாலை பணிகள் அனைத்தும், 18 மாதங்களில் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.