Science and technology
‘அறிவியல் முறை கறிவேப்பிலை சாகுபடியில் அதிக வருமானத்துக்கு உத்தரவாதம்’
மேட்டுப்பாளையம்: அறிவியல் சாகுபடி முறையில், கறிவேப்பிலை விவசாயம் செய்தால், அதிக வருமானம் கிடைக்கும்,என, கோவை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நம்பிக்கை அளித்துள்ளது.
சிறுமுகை அடுத்த இரும்பறையில், கோவை வேளாண் பல்கலை, கோழிக்கோடு அகில இந்திய ஒருங்கிணைந்த வாசனை பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் சார்பில்,
கறிவேப்பிலை விவசாயத்தில் அதிக வருமானம் பெறுவது குறித்து, பட்டியல் இன விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
இதில் அறிவியல் சாகுபடி முறையில், கறிவேப்பிலையை நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, பயிர் செய்வது, அதிக மகசூல் பெறுவது, மதிப்பு கூட்டி விற்பனை செய்வது, பூச்சி, நோய் மேலாண்மை, அறுவடை மற்றும் கூடுதல் வருமானம் பெறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இரும்பறை கிராமத்தில் உள்ள, 70 பட்டியலின விவசாயிகள் பங்கேற்றனர்.
கோவை தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வெங்கடேசன் பேசுகையில், கறிவேப்பிலை உடலுக்கு ஆரோக்கியமான பொருள் என்பதால், சாகுபடியின் பரப்பளவும், உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மக்களின் பயன்பாடுகள் அதிகம் உள்ளது. புவிசார் குறியீடு அங்கீகாரம், விவசாயிகளுக்கு கூடுதல் பலம். அறிவியல் முறை சாகுபடியைப் பின்பற்றினால், விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டலாம், என்றார்.
மேட்டுப்பாளையம் தோட்டக்கலை உதவி இயக்குனர் நந்தினி, கறிவேப்பிலை சாகுபடி தொடர்பாக, தோட்டக்கலைத்துறை செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில் நுட்ப உதவிகள் குறித்து விளக்கினார்.
கறிவேப்பிலை சாகுபடிக்கான அறிவியல் தொழில்நுட்பங்கள், கறிவேப்பிலையின் மதிப்பு கூட்டல் குறித்தும், கறிவேப்பிலையில் ஏற்படும் நோய்கள் மற்றும் அவற்றின் மேலாண்மை, கறிவேப்பிலையை தாக்கும் பூச்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு அறுவடை கத்தரிகள், உயிர் உரங்கள் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
தோட்டக்கலை பேராசிரியர்கள் வாணி, மனோரஞ்சிதம், இணை பேராசிரியர்கள் கணேசன், சித்ரா ஆகியோர் பயிற்சி வழங்கினர்.