தனியார் பஸ்களில் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்திய உரிமையாளர்கள்

சென்னை: 'தமிழகத்தில், பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையை, அரசு கண்டு கொள்ளாத நிலையில், வேலுார் உட்பட சில மாவட்டங்களில், தனியார் பஸ்களில், ஐந்து ரூபாய் வரை, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், சென்னை, மதுரை, நாகர்கோவில், உதகை தவிர, மற்ற இடங்களில் 4,600 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில், 2018ம் ஆண்டுக்கு பின், தனியார் பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. எரிபொருள், உதிரி பாகங்கள் விலை, பல மடங்கு உயர்ந்த நிலையில், தனியார் பஸ் தொழிலில், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பயணிகள் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் பஸ் உரிமையாளர்கள், அரசிடம் கடந்த சில ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு தொடர்ந்து, மவுனம் காத்து வருகிறது. இனியும் அரசை நம்பி பலனில்லை எனக் கருதி, சில மாவட்டங்களில், தனியார் பஸ் உரிமையாளர்கள், தன்னிச்சையாக 'டிக்கெட்' கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
வேலுார், கடலுார், சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில தனியார் பஸ் நிறுவனங்கள், இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணையர் தாமஸ் வைத்யன் கூறுகையில், ''ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இது குறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: கட்டண உயர்வு தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தமிழக அரசு தாமதம் செய்து வருவது கவலை அளிக்கிறது. வேறு வழியில்லாமல், ஒரு சில பஸ்களில் கட்டணம் உயர்த்தியதாக தகவல் வந்தது.
அவர்களை தொடர்பு கொண்டு, 'தமிழக அரசுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்' எனக் கூறினோம். அதை ஏற்று அவர்களும் வழக்கமான கட்டணத்தையே வசூலிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.