மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் விபத்தை குறைக்க சென்டர் மீடியன் அகலம் குறைப்பு

திருப்புவனம்: மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக பரமக்குடி வரை அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில் விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியனின் அகலத்தை குறைக்கும் பணி தொடங்கியுள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை 75 கி.மீ.,துாரம் நான்கு வழிச்சாலையும் அதன் பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை வரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு 2017 முதல் வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. தினசரி ஏழாயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் இப்பாதையை கடந்து வருகின்றன.
திருப்பாச்சேத்தி, போகலுார் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. நான்கு வழிச்சாலையில் ஒரு மீட்டர் முதல் மூன்று மீட்டர் அகலம் வரை சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டு அதில் அரளிச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் விலக இடமின்றி அடிக்கடி விபத்து நேரிட்டு வருகின்றன.
கீழடி விலக்கு, நரிக்குடி விலக்கு, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட இடங்களில் பல முறை விபத்து நடந்து உயிரிழப்பு நிகழ்ந்தன. பெரும்பாலான விபத்துகளுக்கு சாலை குறுகலாக இருப்பதால் விலக முடியாமல் விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நேரிடும் பகுதியை கண்டறிந்து அந்த இடங்களில் சென்டர் மீடியனின் அகலத்தை குறைத்து, சாலையின் அகலத்தை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை மொத்தம் ஒன்பது இடங்கள் விபத்து அதிகளவில் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடங்களில் சென்டர் மீடியன் அகலத்தை குறைத்து சாலையின் அகலத்தை அதிகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சென்டர் மீடியனில் உள்ள அரளிச் செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அதிகபட்சமாக இரண்டு மீட்டர் அகலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.