“எதுக்கும்மா கைகட்டி நிக்குறீங்க..?” - ஆசிரியரின் சாதிய மனநிலையால் பறிபோன மாணவியின் உயிர்!

வேற பள்ளிக்கூடத்துல சேர்க்கலாம்னு முடிவு பண்ணி, பழைய பள்ளிக்கூடத்துல டி.சி. கேட்டிருக்காங்க. அவங்க, `உடனே கொடுக்க முடியாது, இரண்டு வாரத்துல கொடுத்துடுறோம்’னு சொல்லி யிருக்காங்க.
மதுரை, உசிலம்பட்டியில், `யார் முன்னும் கைகட்டி நிற்கத் தேவையில்லை’ என சுயமரியாதையை கற்றுக்கொண்ட மாணவி, ஆசிரியரின் சாதிய மனநிலையால் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பள்ளி மாணவி ஒருவர் தலைமையாசிரியர் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த மாதம் 25-ம் தேதி தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், பள்ளி மாணவி, தன் அம்மாவை கைகட்டக் கூடாது எனச் சொல்லியபோது, மாணவியை ஆசிரியர் கண்டித்ததால்தான் தற்கொலை செய்துகொண்டதாக, அவர் பெற்றோர் காவல்துறையில் புகார் தெரிவிக்க, பள்ளி தலைமையாசிரியர்மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது குறித்து பெண்ணின் அம்மா தவமணி மற்றும் அப்பா பழனிசாமி இருவரும்
பேசும் நிலையில் இல்லையென்பதால், நிஷாந்தியின் பெரியப்பா செல்வத்திடம் பேசினோம்...
“எங்களோட ஊர் தொட்டப்ப நாயக்கனூர். அங்கே பத்தாவது வரைக்கும் ஸ்கூல் இருக்கு. நிஷாந்தி அங்கேதான் பத்தாவது வரைக்கும் படிச்சா. அதுக்கப்புறம் பதினொன்றாவது படிக்க பக்கத்து ஊர்ல இருக்கிற பூச்சிப்பட்டி பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டோம். ஆனா, `எனக்கு ஃபர்ஸ்ட் குரூப் வேண்டாம், செகண்ட் குரூப் கொடுங்க’னு சொல்லியிருக்கு பொண்ணு. ஆனா வாத்தியார், `குறைவான மார்க்தான் எடுத்திருக்க, குரூப் மாத்த முடியாது, இதுலேயே படி’னு சொல்லியிருக்கார்.
நிஷாந்தி 15 நாள்தான் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு. அதுக்குமேல, ’பள்ளிக்கூடம் போகல’னு சொல்லியிருக்கு. பொண்ணோட அம்மா தவமணி பேசி, பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டுப் போய் விட்டிருக்காங்க. ஆனாலும், பள்ளிக்கூடம் பிடிக்கலன்னு சொல்லிட்டு மதியமே திரும்பி வந்திருக்கு.
சரி... வேற பள்ளிக்கூடத்துல சேர்க்கலாம்னு முடிவு பண்ணி, பழைய பள்ளிக்கூடத்துல டி.சி. கேட்டிருக்காங்க. அவங்க, `உடனே கொடுக்க முடியாது, இரண்டு வாரத்துல கொடுத்துடுறோம்’னு சொல்லி யிருக்காங்க. அதுக்கப்புறம் வேற பள்ளிக்கூடத்துல சேர்க் கலாம்னு தேடிப் பார்த்தோம். சில பள்ளிக்கூடங்கள்ல, `லேட்டா வந்துருக்கீங்க’னு சொல்லிட்டாங்க. இன்னும் சில பள்ளிக்கூடங்கள்ல, ஹாஸ்டல்ல தங்கினா தான் அட்மிஷன் போட முடியும்னு சொல்லி யிருக்காங்க.
அப்படியே சோர்ந்து போய் பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போதுதான், தெரிஞ்சவங்க ஒருத்தர் உசிலம்பட்டி பள்ளிக்கூடத்தைப் பத்தி சொல்லியிருக்காங்க. உடனே அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போய், தலைமையாசிரியர் விமலாதேவியைப், `பதினொன்றாம் வகுப்புக்கு அட்மிஷன் போடணும்'னு சொல்லியிருக்காங்க.
அப்போ அந்த ஆசிரியர், `ஏன் அந்தப் பள்ளிக்கூடத்துல இருந்து வந்திருக்கீங்க? பள்ளிக்கூடத்தை விட்டு எத்தனை நாள் ஆச்சு?'னு விசாரிச்சிருக்காங்க. பூச்சிப்பட்டி பள்ளிக்கூட ஆசிரியரோட தொடர்பு எண்ணை வாங்கி, அவருக்கு போன் பண்ணிப் பார்த்திருக்காங்க. அவங்க போனை எடுக்கல.
உடனே நிஷாந்தி பத்தாவது படிச்ச ஸ்கூலுக்கு போன் பண்ணி விசாரிச்சப்போ, `நிஷாந்தி நல்ல பொண்ணு, நல்லா படிப்பா'னு அங்க இருந்த ஆசிரியர் சொல்லி யிருக்காங்க. அங்க விசாரிச்சுட்டு இருந்தப்போ, நிஷாந்தியோட அம்மா கை கட்டிக்கிட்டு நின்னுட்டு இருந்திருக்காங்க. அதைப் பார்த்த பொண்ணு, `கை கட்டக் கூடாது, இயல்பா நில்லும்மானு’ சொல்லியிருக்கு.
அதுக்கு டீச்சர், `கைக்கட்டி நின்னா இப்போ என்ன?’னு கேட்டிருக்காங்க. `அப்போ... நீங்க கைகட்டி நிக்க சொல்றீங்களா?’னு நிஷாந்தி கேட்டிருக்கு. உடனே டீச்சர், `உனக்கு அவ்வளவு திமிரா? நீ அந்த ஸ்கூல்ல என்ன தப்பு பண்ணிட்டு வந்த? அதனாலதான் உன்னை விரட்டி விட்டாங்களா?'னு கேட்டிருக்காங்க.
இப்படி ரெண்டு வார்த்தை கடுமையா பேசி, முதல்ல படிச்ச ஸ்கூல்ல இருந்து நிஷாந்தி வெளியே ஓடி வந்த மாதிரி சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டதும் பொண்ணு அரண்டு போயிடுச்சு. வீட்டுக்குக்கு வந்ததுல இருந்து மன உளைச்சல்லேயே இருந்திருக்கு.
நிஷாந்தி வீட்டுல ரொம்ப அமைதியான பொண்ணு. பெரியவங்க பேசினா பேசும், இல்லாட்டி பேசாது. யார்கிட்டயும் தேவையில்லாம பேசாது. படிப்பு உண்டு, தன் வேலை உண்டுனு இருக்கும். யார்கிட்டயும் அதிகமா பழகாது. பக்கத்து தெருவுல இருக்கிறவங்களுக்குக்கூட அந்தப் பிள்ளையைப் பற்றி அதிகமா தெரியாது. வீட்டுக்கு வந்துட்டா கதவை லாக் பண்ணிக்கிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கும். காலையில ஸ்கூலுக்குப் போகும்போதுதான் வீட்டை விட்டுக் கிளம்பும்.
அன்னிக்கு ஆசிரியர் பேசின அவமானத்துலயும், கோவத்துலயும் ஸ்கூல்ல இருந்து 5 கிலோமீட்டர் தூரம் நடந்தே வீட்டுக்கு வந்திருக்குது. வீட்டுல மன உளைச்சல்லயே இருந்திருக்கு.
ரெண்டு நாள்ல, கடந்த 25-ம் தேதி, நிஷாந்தியும் அவங்க அம்மாவும், நிஷாந்தி பத்தாவது வரை படிச்ச ஸ்கூல்ல போய் டி.சி வாங்கியிருக்காங்க. அப்படியே அம்மா வேலைக்குப் போக, நிஷாந்தி வீட்டுக்கு வந்திருக்காங்க. வேலைக்குப் போன அவங்க அம்மா வீட்டுக்கு வந்து பார்த்தப்போ, நிஷாந்தி தற்கொலை பண்ணியிருக்கறதைப் பார்த்து துடிதுடிச்சுப் போயிட்டாங்க.
போலீஸ்ல புகார் கொடுத்தோம். முதல்ல, `சந்தேக மரணம்’னு சொல்லி கேஸ் போட்டாங்க. நாங்க, `இல்ல, டீச்சர் திட்டினதாலதான் பிள்ளை தற்கொலை பண்ணியிருக்கு. அந்த ஆசிரியர் மேல எஸ்சி/எஸ்டி வழக்குப் பதிவு பண்ணனும்’னு சொன்னோம். பள்ளிக்கூடத்துல இருக்கிற சிசிடிவி கேமராவுல பார்க்கும்போதும், ஆசிரியர் திட்டுனதையும், கையை ஓங்கினதையும் போலீஸ்காரங்க பார்த்திருக்காங்க. அதுக்கு பின்னாடி தான், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்துக்கு கீழ வழக்குப் பதிவு பண்ணாங்க. ஒருத்தரு கீழ, ஒருத்தரு மேலனு சொல்றது தப்புன்னு சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியரே கைகட்டி நிற்கணும்னு சொல்லி யிருக்காங்க. அவங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கணும்’’ என்றார் கொதிப்போடு.
இது குறித்து உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷிடம் விளக்கம் கேட்டோம். “புகாரளித்ததும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஆசிரியர் என்ன பேசினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த பிறகே இது குறித்து முழுமையான சொல்ல முடியும்” என்றார்.
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல் - மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர் களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பது அவலம்.
