Crime, law and justice
சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான் ராகுலுக்கு எதிரான வழக்கில் கோர்ட் கருத்து
--–சிறப்பு நிருபர்– நம் ராணுவத்தை அவமதித்துவிட்டதாக கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது
நம் ராணுவத்தை அவமதித்துவிட்டதாக கூறி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது தொடரப்பட்ட அவதுாறு வழக்கை, அவசரமாக விசாரிக்க கோரினால், அதற்குரிய நடைமுறைகளின்படி மனு தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தியா – சீனா படைகளுக்கு இடையே கடந்த 2022ல், அருணாச்சல பிரதேச எல்லையில் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய காங்., – எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், ‘சீன வீரர்கள் நம் ராணுவ வீரர்களை தாக்குகின்றனர்’ என விமர்சித்து இருந்தார்.
ராகுலின் இந்த கருத்து நம் ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறி, எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குநர் உதய் சங்கர் ஸ்ரீவத்சவா, லக்னோ நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த லக்னோ நீதிமன்றம், ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பிய நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
நிவாரணம் கோரி ராகுல் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், லக்னோ நீதிமன்ற நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கவுரவ் பாத்தியா, ‘‘ராகுல் வி.வி.ஐ.பி., அல்ல; இவ்வழக்கு கடந்த ஐந்து மாதங்களாக பட்டியலிடப்பட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது நீதிமன்ற மாண்புக்கு உகந்தது அல்ல,’’ என வாதாடினார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுங்கள். அவசர விசாரணை கோரி முறைப்படி மனு தாக்கல் செய்யுங்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான். யாரும் வி.வி.ஐ.பி., அல்ல. உரிய நடைமுறையுடன் மனு தாக்கல் செய்யப்பட்டதும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.