மாநில, தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா: விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது தேனி மாவட்டம். மாவட்டத்தின் துவக்கப்பகுதியான கூடலுாரில் புறவழிச்சாலையும், தெற்கு மந்தை வாய்க்காலில் இருந்து வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை 4. கி.மீ., தூர மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. 2022ல் மாநில நெடுஞ்சாலை இருவழிச்சாலையாக அகலப்படுத்தி சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
கேரளா எல்லையில் அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகம். தினந்தோறும் சுருளி அருவி, தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும் அதிகமாக இவ்வழியே செல்கின்றன.
பறவழிச் சாலை அமைத்து, மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைத்த போதிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் கடந்த சில மாதங்களாக விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.
வாகன நிறுத்தம் இல்லாத மண்டபங்கள் கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் அகலப்படுத்தும் பணி நடக்கும் போதே முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஏற்றவாறு ரோடு சுருங்கி யுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் புறவழிச்சாலையிலும் கடைகள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள் அமைத்து ஆக்கிரமிப்புகள் அதிகமாகி யுள்ளன. இப்பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. மாவட்டத்தில் தேனி -திண்டுக்கல் பைபாஸ், தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி பல திருமண மண்டபங்கள் அமைக்கின்றனர். இவர்கள் வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்வது இல்லை. இதனால் திருமண மண்டபத்தை ஒட்டிய ரோட்டோரங்களில் விசேங்களுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்துவதால் முகூர்த்த நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இருந்த போதிலும் இதுவரை அகற்றுவதற்கான நடவடிக்கை இல்லை. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்த போதிலும் எல்லைப் பகுதியான கூடலுாரில் விரைவாக அகற்றி விபத்துகளை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.