Religion
இலுப்பக்குடி சுயம்பிரகாசேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காரைக்குடி:காரைக்குடி அருகே இலுப்பக்குடி சவுந்திரநாயகி சமேத சுயம்பிரகாசேஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடந்தது.
நகரத்தார்களின் 9 கோயில்களில் ஒன்றான இலுப்பக்குடியில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நடந்தது. செப்., 10 ல் மங்கள இசை, கணபதி பூஜையுடன் துவங்கியது. செப்., 11 ல் கோ பூஜை, கணபதி ேஹாமமும், செப்., 14 ல் முதல், இரண்டாம், 3 ம் கால யாகசாலை பூஜைகளும், செப்., 16 ல் 4 ம் கால யாகசாலை, மாலை 5 ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை புனித நீர் கலசங்கள், மங்கள வாத்தியம் முழங்க கோயில் வளாகத்தில் புறப்பாடாகி சென்றது. மூலஸ்தானத்தில் உள்ள பரிவார, உற்சவர் தெய்வ கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியதும், தொடர்ந்து விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தினர். கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சவுந்திரநாயகி சமேத சுயம்பிரகாசேஸ்வரரை தரிசனம் செய்தனர். நேற்று மாலை சீர்வரிசை புறப்பாடும், இரவு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. விழாவில் நகரத்தார்கள் அழகப்பன், முத்துக்குமார், ராமகிருஷ்ணன், மெய்யப்பன், செட்டியப்பன் பங்கேற்றனர். இலுப்பக்குடி கோயில் நகரத்தார்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.