Lifestyle and human interest
கோவில்களுக்கு யானைகளை வழங்குவது தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு
சென்னை,திருக்கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவது தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித

திருக்கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவது தொடர்பான சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பிற மாநிலங்களிலிருந்து தமிழகக் கோவில்களுக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவதைத் தமிழ்நாடு வனத்துறை தடுக்க முடியாது என்றும், அசாம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கோவில்களுக்கு யானைகளைக் கொண்டு வர அனுமதிப்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை மனதார வரவேற்கிறேன். இது ஆன்மிகப் பெருமக்களுக்கும், பக்தர்களுக்கும் கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.
திருக்கோவில் உற்சவங்கள், பிரம்மோற்சவங்கள் மற்றும் குடமுழுக்கு நன்னாள்களில் யானைகளின் பங்கு என்பது நமது பாரம்பரிய வழிபாட்டு மரபின் பிரிக்க முடியாத அங்கமாகும். எனவே அதன் முக்கியத்துவம் கருதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வளர்ப்பு கோவில் யானைகள் மற்றும் மடங்களில் இருக்கும் யானைகளுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த 48 நாள் நலவாழ்வு முகாமை முந்தைய திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நிறுத்திவிட்டது.
கோவில் யானைகள் என்பவை நமது ஆன்மிக அடையாளத்தின் மங்கலச் சின்னங்களாகும். எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் (HR&CE) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களுக்கும் யானைகள் நன்கொடையாக வழங்கப்படுவதற்குத் தேவையான நடைமுறைத் தடைகளை நீக்க வேண்டும். அதற்கான முன்முயற்சிகளை எடுப்பதோடு, நிறுத்தப்பட்ட "கோவில் யானைகள் சிறப்புப் புத்துணர்ச்சி முகாமை" இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக மீண்டும் தொடங்கிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.