கோத்தகிரி அணையட்டி பகுதியில் கரடி நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம்..!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அணையட்டி கிராமப் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அணையட்டி கிராமப் பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பகல் நேரங்களிலேயே கரடிகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உலா வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் அறுபது சதவீதம் வனப்பகுதிகளைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, மான் போன்ற பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. சமீபகாலமாக, உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் கிராமப்புறங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் வருவது அதிகரித்து வருகிறது.
கோத்தகிரி மற்றும் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. சமீப தினங்களில், பகல் நேரங்களிலேயே கரடிகள் பொதுமக்கள் கண்களுக்குத் தென்படும் வகையில் உலா வருகின்றன. அணையட்டி கிராமப் பகுதியில் ஒற்றைக் கரடி ஒன்று பகல் நேரங்களிலும் கோவில் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு அருகாமையில் உலா வருவதால் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
