Politics
விஐபி தரிசனம் ஏமாற்றம்: திருவண்ணாமலையில் பொதுவரிசையில் நின்று சேகர்பாபு தரிசனம்
திருவண்ணாமலை:திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விஐபி தரிசனம் மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில்

திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விஐபி தரிசனம் மறுக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
திமுக முன்னாள் அமைச்சர் நேற்று சேகர்பாபு தனது துணைவியாருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். வடக்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் சென்ற அவர், சம்பந்த விநாயகரை தரிசித்துவிட்டு சிறப்பு தரிசனத்துக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நேரமாகியும் கோவில் அதிகாரிகள் யாரும் அவரை அழைத்துச் செல்ல வரவில்லை. இதையடுத்து, நீண்ட நேரம் காத்திருந்த சேகர்பாபு, பொது தரிசன வரிசையில் சென்று உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் அர்ச்சகர்கள் அவர்களுக்கு பிரசாதம் வழங்கி மாலை அணிவித்தனர்.
திருவண்ணாமலை கோவிலுக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வருகை தரும் நிலையில், அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டு சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சேகர்பாபுவை வேண்டுமென்றே காத்திருக்க வைத்ததாக திமுகவினர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் வேறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஐபி தரிசனம் தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சேகர்பாபு கோவிலுக்கு வருவது குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாமல், திடீரென வந்ததால் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தால் சேகர்பாபுவுக்கு சிறப்பு தரிசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை கோவிலில் சேகர்பாபுவுக்கு விஐபி தரிசனம் மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.