மழைக்கு சகதியாகும் தாங்கி சாலை: சிரமத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தில், லேசான மழைக்கே சகதியாக உள்ள சாலையை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி கிராமத்தில் இருந்து நாயகன்பேட்டை, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் ‛கான்கிரீட்' சாலை உள்ளது.
இச்சாலையில் பழண்டியம்மன் கோவில் அருகில், 20 மீட்டர் நீளத்திற்கு சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறியுள்ளது. இதனால், லேசான மழைக்கே சகதி சாலையாக மாறிவிடுகிறது.
இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, தாங்கி கிராமத்தில் மழைக்கு சகதியாக மாறும் சாலையை சீரமைக்க வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.