Arts, culture, entertainment and media
ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து வால்பாறையில் மக்கள் ஏமாற்றம்
வால்பாறை: வால்பாறை அஞ்சலகத்தில், மீண்டும் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளர் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தங்கமகள் சேமிப்பு திட்டம், இன்சுரன்ஸ், ஆதார் உள்ளிட்ட சேவைகள் சிறப்பாக செயல்படுகின்றன.
ஆனால், வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக கடந்த, 2022ல் துவங்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டது.
வால்பாறையில் பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றன்.
அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அஞ்சலகத்தில் செயல்பட்ட ரயில் டிக்கெட் முன் பதிவு மையத்தில் 'ரிசர்வேஷன்' செய்து வந்தனர்.
இந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடந்த ஆண்டு செப்., முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களின் நலன் கருதி, மீண்டும் ரயில் டிக்கெட் முன்பதிவை துவங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
அஞ்சல அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறை அஞ்சலகத்தில் கடந்த 2022 செப்., மாதம் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவு டிக்கெட் முன்பதிவு இல்லாததால், ஊழியர் பற்றாக்குறையினாலும் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
'குறிப்பாக, வால்பாறை நகரில் செயல்படும் அஞ்சலகத்தில் மொத்தம் உள்ள ஏழு பணியிடங்களில், போஸ்ட் மாஸ்டர் பதவி உட்பட நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் சேவையை நிறைவாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.