Arts, culture, entertainment and media
2024ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

இந்திய திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், ரஜினிகாந்த் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த முறை 2023ஆம் ஆண்டிற்காக மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது கன்னட நடிகர் ஆனந்த் நாக்-கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருது வரும் 22ஆம் தேதி குஜராத்தில் நடைபெறும் 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கையால் வழங்கப்படவுள்ளது.
அனந்த் நாக் கன்னடத்தில் மட்டும் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதைத்தவிர்த்து தமிழ், இந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் சேர்த்து மொத்தம் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1973ஆம் ஆண்டு ‘சங்கல்பா’ என்ற கன்னட படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து ஹம்சகீதே, சந்தனத கொம்பே, கணேஷனா மதுவே உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தார். மேலும் ஆரம்பகாலகட்டத்திலேயே 'அங்குர்', 'நிஷாந்த்', 'பூமிகா' மற்றும் 'கொண்டூரா' போன்ற படங்கள் மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். தமிழில் ரஜினி நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ படத்தில் நடித்திருந்தார்.
இவர் கமர்ஷியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக பயணித்து வருகிறார். அவரது சகோதரர் சங்கர் நாக் இயக்கிய 'மல்குடி டேஸ்' (Malgudi Days) தொடரில் பல்வேறு கதாபாத்திரங்களில் அவர் நடித்த விதம், அவருக்கு முக்கிய மைல்கல் படமாக அமைந்தது. நடிப்பைத் தாண்டி அரசியலிலும் இவர் கால் பதித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவகவுடா உருவாக்கிய ஜனதா தளக் கட்சியில் இணைந்து பணியாற்றினார். மேலும் 1996ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். பின்பு பிஜேபி-யில் இணைவார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் இணையவில்லை. 78 வயதான இவர், கடந்த ஆண்டு ‘பத்ம ஸ்ரீ’ விருதைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)