Arts, culture, entertainment and media
பலவித சத்துகள் நிறைந்த நரிப்பயறு... பசுந்தாள் உரம், கால்நடைத் தீவனம்!
செடிகளைத் தரையிலிருந்து அரையடி உயரத்துக்கு விட்டுட்டு அதுக்கு மேல உள்ள பகுதியை மட்டும் மெஷின் மூலம் அறுவடை பண்ணி, நெற்றுகளிலிருந்து பயறைப் பிரிப்பேன்.

4 ஏக்கர்... ரூ.1,12,000 லாபம்!
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயிகள் கணிசமான பரப்பில் நரிப்பயறுச் சாகுபடி செய்து வந்தனர். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டம் ஆகியவற்றில் பரவலாகக் கோடைக்காலப் பயிராக நரிப்பயறுச் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இது, வறட்சி தாங்கி வளரக்கூடிய பயிர். மானாவாரி நிலத்திலும் பயிர் செய்யலாம். களையெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து வகையான மண்கண்டங்களில் செழிப்பாக விளையும்.
இவ்வளவு மகத்துவங்கள் நிறைந்ததால், விவசாயிகள் பலரும் இதைத் தொடர்ந்து சாகுபடி செய்து வந்தனர். ஆனால், `காலத்தின் கோலம்' என்று சொல்வதுபோல் நரிப்பயறை விவசாயிகள் கைவிட்டு விட்டது பெரும் சோகம்தான். கடந்த பல ஆண்டுகளாக, நிலங்களில் நரிப்பயறை காண்பதென்பது மிகவும் அரிதாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில்தான், கடலூர் மாவட்டம், திருமுட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வட்டத்தூர், நந்தீஸ்வர மங்கலம், சோழகரம், புடையூர், வானமாதேவி, குமரக்குடி, மழவராயநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சமீப காலமாக நரிப்பயறைச் சாகுபடி செய்ய தொடங்கியிருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் இயற்கை முறையில் பயிர் செய்வது, கூடுதல் சிறப்பு. அந்த வகையில், வட்டத் தூரைச் சேர்ந்த இளமாறன், கோடைக்காலப் பயிராக நரிப்பயறை இயற்கை முறையில் சாகுபடி செய்து, கணிசமான லாபம் பார்த்து வருகிறார்.
வட்டத்தூரிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் இருக்கிறது, இளமாறனின் தோட்டம். சம்பாச் சாகுபடிக்கான ஆரம்பக் கட்ட வேலைகளில் மும்முரமாக ஈடு பட்டிருந்தவர், மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசினார்.
அண்ணன் காட்டிய வழி!
``நாங்க விவசாயக் குடும்பம்தான். பள்ளிப் படிப்பை முடிச்சதுமே விவசாயத்தில் இறங்கிட்டேன். எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. மூணு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ரசாயன விவசாயம்தான் செஞ் சுட்டுருந்தேன். என்னோட அண்ணனுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு அதிகம். ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன் படுத்துறதால நிலத்திலும் உணவிலும் ஏற்படும் பாதிப்புகள் பத்தி எனக்கு எடுத்துச் சொன்னார். அதுக்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்.
கடந்த மூணு வருஷத்தில் கொஞ்சம்கூட ரசாயனம் பயன்படுத்தலை. வழக்கமா சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்வேன். தை மாசம் நெல் அறுவடை செஞ்சு முடிஞ்ச பிறகு நரிப்பயறு விதைப்பேன். இது ஒரு அருமையான பயிர். இரண்டு முறை தண்ணீர் கொடுத்தால் போதும். இதுக்கு இயற்கை இடுபொருள்களும் கூட அதிகமா தேவைப் படுறதில்ல. பூச்சி, நோய்த் தாக்குதலும் ஏற்படாது. என்னோட நேரடி அனுபவத்தில் உளுந்தை விடவும் நரிப்பயறில் கூடுதல் பலன்கள் கிடைக்கிது" என்ற இளமாறன், நரிப்பயறுச் சாகுபடி குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
75 நாள்களில் வருமானம்!
``மூணு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் கோடைப் பட்டத்தில் உளுந்துதான் பயிர் செஞ்சுட்டிருந்தேன். மண்ணை வளப்படுத்தப் பசுந்தாள் உரமாக நரிப்பயறு விதைப்பு செஞ்சு மடக்கி உழுதால், நல்ல பலன் கிடைக்கும்னு இயற்கை விவசாயிகள் சொன் னாங்க. விதைச்ச 20-30 நாள்களுக்குள்ளேயே தளதளனு இலைகள் உருவாகி, நிலம் முழுக்க பச்சைப் போர்வை விரிச்சி மாதிரி பசேல்னு மாறிடும். விதைச்ச 35-45 நாள்களில் பூ பூத்து பிஞ்சுகள் உருவாயிடும். விதைச்ச 75-ம் நாள் காய்கள் முதிர்ச்சி அடைஞ்சு, நெற்றுகளா மாறி அறுவடைக்குத் தயாராயிடும்.
உளுந்தைவிடக் கூடுதல் விலை!
செடிகளைத் தரையிலிருந்து அரையடி உயரத்துக்கு விட்டுட்டு அதுக்கு மேல உள்ள பகுதியை மட்டும் மெஷின் மூலம் அறுவடை பண்ணி, நெற்றுகளிலிருந்து பயறைப் பிரிப்பேன். நரிப்பயறில் அதிக சத்துகள் நிறைஞ்சிருக்குங்கிற விழிப்புணர்வு மக்கள் மத்தியில அதிகரிச்சிருக்குது. அதனால், நல்ல விலை கிடைக்கிது. முதல்முறை சாகுபடி செஞ்சப்போ நான் எதிர்பார்க்காத அளவுக்கு அதிக லாபம் கிடைச்சதால, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அறுவடை செஞ்ச 8-ம் நாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சினால், 5 நாளில் மறுபடியும் பயிர்கள் துளிர்த்து வந்துடும். அடுத்த 15 நாளில் நிறைய இலைகள் உருவாகிடும். அதை மடக்கி உழுதால் பசுந்தாள் உரமா பலன் கொடுக்குது. உளுந்தோடு ஒப்பிடும்போது, நரிப்பயறுக்குப் பராமரிப்பு ரொம்பவும் குறைவு. பூச்சி, நோய் தாக்குதல்களும் இல்லை. உளுந்தை விட அதிக விலையும் கிடைக்கிது’’ என்ற இளமாறன், மகசூல் மற்றும் வருமானம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு கிலோ 160 ரூபாய்!
``வழக்கம் போல, இந்த வருஷமும் 4 ஏக்கர் நிலத்தில் கோடைப் பட்டத்தில் நரிப்பயறுச் சாகுபடி செஞ்சேன். ஒரு ஏக்கருக்கு 225 கிலோ வீதம் 4 ஏக்கர் நிலத்தில் 900 கிலோ மகசூல் கிடைச்சது. அதை, விருத்தாசலத்தில் இருக்கிற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செஞ்சேன். ஒரு கிலோவுக்கு 160 ரூபாய் வீதம், மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. மொத்தம் 32 ஆயிரம் ரூபாய் செலவு போக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைச்சது’’ என்று மகிழ்ச்சியோடு சொல்லி விடைகொடுத்தார், இளமாறன்.
சிறந்த ஊட்டச்சத்து உணவு!
நரிப்பயறில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன. இதில் வடை செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். பொரியல் செய்தும் சாப்பிடலாம். காய்கறி கூட்டு செய்வதற்குச் சேர்ப்பு பொருளாகவும் பயன்படுத்தலாம். நரிப் பயறை வறுத்துப் பொடித்து தேங்காய், வெல்லம், ஏலக்காய் சேர்த்துச் செய்யப் படும் உருண்டை குழந்தை களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு நரிப்பயறு உருண்டை யைத் தின்பண்டமாகக் கொடுக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டு மக்கள், தோசை மாவில் உளுந்துக்கு பதிலாக நரிப்பயறையும் பயன்படுத்தியதாகச் சொல்கிறார்கள், முதியவர்கள்.
உளுந்தின் தோலை நீக்குவது சிரமமான வேலை. ஆனால் நரிப்பயறை தண்ணீரில் போட்ட சில நிமிடங்களில், தோல் தானாகவே நீங்கிவிடும். இந்தச் செடிகளைக் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். கறவை மாடுகளின் பால் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் நரிப்பயறு இலைகள் பெரிதும் கை கொடுக்கும். இதை ஆடு, மாடுகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும்.
நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்!
“நரிப்பயறில் புரதம் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது. இதை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மலச்சிக்கல் நீங்கும். உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசியச் சத்துகளும் இதில் உள்ளன. நீரழிவு நோய் உள்ளவர்கள், நரிப்பயறை முளைக்கட்டிச் சாப்பிட்டால் கட்டுப்படும். இதை வறுத்து உடைத்து தேங்காய்ப்பால் மற்றும் கற்கண்டு சேர்த்து பால் கஞ்சியாக அன்றாடம் அருந்தி வந்தால், நெஞ்சுச் சளியைப் போக்கி கபத்தைக் குறைக்கும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு, இது மிகச் சிறந்த புரத உணவு. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து செரிமானத் துக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இதில் கால்சியம் சத்து கணிசமான அளவு இருப்பதால், எலும்புகளை வலுவாக்கும். இதில், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துகள் அதிகளவில் இருப்பதால், மனித உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவும். புரதமும் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், பசியைக் குறைத்து உடல் எடை குறைப்புக்குத் துணைபுரிகிறது. இதில் உள்ள துத்தநாகச் சத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்த்தொற்றுகளிலிருந்து பாது காக்கிறது” என்கிறார்கள், பாரம்பர்ய மருத்துவர்கள்.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
ஒரு ஏக்கர் பரப்பில் நரிப்பயறுச் சாகுபடி செய்யும் முறை குறித்து இளமாறன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...
“நெல் அறுவடை செய்த பிறகு, மண்ணில் லேசான ஈரம் இருக்கும்போது, 2 சால் புழுதி உழவு ஓட்டி 5 கிலோ நரிப்பயறு விதைகளை நிலம் முழுவதும் பரவலாகத் தூவி விதைக்க வேண்டும். விதைத்த 20-30 நாள்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அப்போது, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா எனக் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். விதைத்த 40-50 நாள்களில் மீண்டும் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி, 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம் எனக் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். விதைத்த 40-45 நாள்களில் பூ பூத்து பிஞ்சுகள் உருவாகும். விதைத்த 65-75 நாள்களில் காய்கறி முற்றி, நெற்றுகளாக மாறி அறுவடைக்குத் தயாராகி விடும்.
நெற்றுகளை மட்டும் தனியாக அறுவடை செய்வது சற்று சிரமமான காரியம். எனவே, தரையிலிருந்து அரை அடி உயரம் வரை தண்டுப் பகுதியை விட்டுவிட்டு, அதற்கு மேல் பகுதியை அறுவடை செய்து நெற்றுகளைப் பிரித் தெடுக்கலாம். பிறகு நெற்றுகளை உடைத்து பயறைத் தனியாகப் பிரித் தெடுக்க வேண்டும். நெற்றுகள் உடை பட்டு, அதில் பயறு சேர்ந்திருக்கும். அவற்றைத் தூற்றி சுத்தப்படுத்தி பயறைத் தனியாகப் பிரித்தெடுக்கலாம். நரிப்பயறு அறுவடை செய்த பிறகு, தண்ணீர் பாய்ச்சினால், மீண்டும் செழித்து வளரும். ஒரு மாதம் கழித்து அவற்றை மடக்கி உழுது உரமாக்கலாம். மடக்கி உழவு செய்யாமல் வளரவிட்டால், சில வாரங் களில் இரண்டாவது முறை அறுவடை செய்யலாம்.’’
உயிர் மூடாக்கு!
“நரிப்பயறு செடி, அரையடி முதல் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இது, குறுகிய தரை படர் செடி வகையைச் சார்ந்தது. இது செங்குத்தாக உயரமாக வளர்வதைவிட, தரையோடு படர்ந்து அகலமாகப் பரவும் தன்மையுடையது. இதன் தண்டுப்பகுதி தரையோடு படர்ந்து 1 முதல் 2 அடி விட்டம் வரை கிளைகளைப் பரப்பி வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்தச் செடிகள், நிலத்தை மூடிப் படர்வதால் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் உதவுகிறது. எனவே, இது மிகச் சிறந்த உயிர் மூடாக்கு. இதை மடக்கி உழுதால், பசுந்தாள் உரமாகவும் பயன்படும். மண்ணுக்கு அபரிமிதமான அளவுக்கு தழைச்சத்து கிடைக்கும்” என்கிறார்கள், இயற்கை வேளாண் வல்லுநர்கள்.
