தட்டுப்பாடு ராமநாதபுரத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு.. வரத்து நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புகார்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவின் பாலகங்களில் பால் பாக்கெட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ரூ.2 ரூ.5 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். நாளுக்கு நாள் பால் பாக்கெட்டுகள் வருகை குறைந்து வருவதால் விற்பனை சரிவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்த பாலில் இருந்து நிலைப்படுத்திய பால், சமச்சீர் செய்யப்பட்ட நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்புப் பால் மற்றும் சமன்படுத்தப்பட்ட பால் என வெவ்வெறு தரத்தில் விற்கப்படுகின்றன. பால் பாக்கெட்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு மாதாந்திர பால் விற்பனை கமிஷன் வழங்குகிறது.
இவை அனைத்தும் பால் பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள விலைக்குள் அடங்கும். தனியார் பாக்கெட் பாலை விட குறைந்த விலையில் உள்ளதால் நுகர்வோர் அதிகம் பயனடைந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் கூடுதல் விலைக்கு ஆவின் பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பதப்படுத்தப்பட்ட பால், நிறை கொழுப்பு பால் விற்கப்படுகிறது. அரசின் உத்தரவுப்படி அரை லிட்டர் பால் ரூ.22 க்கும், நிறை கொழுப்பு பால் ரூ.30 க்கும் விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால் ராமநாதபுரம் நகரில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் ரூ.2 மூதல் ரூ.5 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நுகர்வோர்களை தக்க வைக்க மாதாந்திர அட்டை மூலம் பால் விநியோகிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த முறையும் கைவிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கூடுதல் விலை கொடுத்து தனியார் பால் பாக்கெட் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதுகுறித்து ஆவின் விற்பனையாளர்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆவின் பால் பாக்கெட் மற்றும் தயிர் மட்டும் தான் வருகின்றன. அதுவும் கேட்டதை விட குறைவான அளவு தான் தருகின்றனர். இதனால் உரிமம் பெற்று பால் விற்பனை செய்வோருக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை. ஆவின் நிர்வாகத்திடம் ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் உள்ளிட்ட உப பொருட்களை சப்ளை செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஐஸ்கிரீம் தொடர்ந்து குளிர்ச்சியான சூழலில் இருக்க வேண்டும். அதற்கேற்ற சரக்கு வாகனங்கள் இல்லாததால் தொலை துார பகுதிகளுக்கு கொண்டு வரமுடிவதில்லை. அதேபோல் சாதாரண வாகனங்களில் பால் பாக்கெட்கள் கொண்டு வருவதால் சில மணி நேரங்களில் கெட்டு போய் விடுகின்றன. இதனால் விற்பனையும் நாளுக்கு நாள் சரிகிறது. சில விற்பனையாளர்கள் நஷ்டத்தை சரி செய்ய கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என்றனர்.
இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், மக்களிடம் இருந்து கூடுதல் விலைக்கு விற்பது குறித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடர்ந்து இது போன்று செயல்படும் முகவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஆவின் பொருட்களை உரிய நேரத்தில் சப்ளை செய்து வருகிறோம் என்றார்.