சாலையோரம் அசல் இத்தாலிய பீட்சா நோ டாப்பிங்ஸ், நோ சைடிஷ்
ரோட்டோர கடைன்னாலே டீ, பஜ்ஜி, பானிபூரி தான் நினைவுக்கு வரும். ஆனால், இப்போது அதே ஸ்ட்ரீட் ஷாப் ஸ்டைலில் இத்தாலிய பீட்சாவை கொடுத்து அசத்தி வருகிறது ‘விவாசே பிஸ்ஸேரியா’!
இத்தாலியில் பீட்சா சாப்பிடும் முறையை கற்ற செஃப் சஞ்சய்குமார், சாய்பாபா காலனியில் இதை தொடங்கியுள்ளார். கால்பந்து விளையாடி வந்த சஞ்சய்குமார், தனது எதிர்காலத்துக்காக இத்தாலி சென்றபோது அங்குள்ள பீட்சா கலாசாரத்தை கவனித்துள்ளார்.
இந்தியாவில் பீட்சாவை பெரும்பாலும் ஸ்நாக்ஸ் போல சாப்பிடும் நிலையில், இத்தாலியர்கள் அதை தினசரி உணவாகவே எடுத்துக்கொள்வது அவரை ஆச்சரியப்படுத்தியது.
இதையடுத்து அங்குள்ள பீட்சா தயாரிப்பு முறையை கற்று, அதை கோவையிலும் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
மெல்லிய கிரஸ்ட், குறைந்த டாப்பிங்ஸ், இயற்கையான சுவை என இத்தாலிய பாணியில் பீட்சா தயாரிக்கப்படுகிறது.
தினமும் பண்ணையில் இருந்து புதிதாக வாங்கப்படும் பாலில் இருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது. இத்தாலியில் இருந்து தக்காளி, மாவு உள்ளிட்ட சில முக்கிய பொருட்களையும் இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, தினமும் புதிதாக தயாரிக்கும் சீஸ் பீட்சாவுக்கு தனி சுவையை கொடுக்கிறது.
பெரிய பீட்சா பிராண்டுகளில் இருப்பது போல் அதிக டாப்பிங்ஸ், சாஸ், சைடு டிஷ்கள் என இல்லாமல், ‘பீட்சாவை அதன் உண்மையான சுவையோடு ஒரு முழுமையான உணவாக சாப்பிட வேண்டும்’ என்பதே விவாசேவின் நோக்கம்.
ரெஸ்டாரன்ட் ஆடம்பரம் இல்லாமல், சாலையோர வெண்டர் மாதிரியான எளிய அமைப்பில், நியாயமான விலையில் இத்தாலிய பீட்சாவை வழங்குவதும் விவாசேவின் சிறப்பு.
இதனால், வழக்கமான பீட்சா சுவையிலிருந்து வித்தியாசமாக முயற்சி செய்ய விரும்பும் ஜென் சி மத்தியில் தற்போது ‘விவாசே’ டிரெண்டாகி வருகிறது.