Arts, culture, entertainment and media
விவசாயிகள் போராட்டம் உணவு தர அனுமதி மறுப்பு
திருச்சி: பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி, திருச்சி அருகே போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு, வெளி நபர்கள் உணவு தர அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழகத்தில், விவசாயிகளின் பயிர்க்கடன்களை, தேர்தல் வாக்குறுதிப்படி, முழுயைாக தள்ளுபடி செய்ய வேண்டும் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 15 முதல், 40 சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், சமயபுரம் டோல் பிளாசா அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த, 15ல் தமிழக அமைச்சர்களுடன், விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. நேற்றும், மூன்றாவது நாளாக இரவு, பகலாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்களுக்கு வெளி நபர்கள் மூலம் நேற்று உணவு கொண்டு வரப்பட்டது.
ஆனால், 'அவற்றை போராட்ட இடத்தில் வழங்க அனுமதிக்க முடியாது' என, போலீசார் தடுத்ததால், விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின், வருவாய்த்துறையினர் சமாதானம் செய்ததால், இருதரப்பினரும் அமைதியாகினர்.
விவசாய சங்கத்தினர் கூறுகையில், 'அரசு பேச்சு நடத்தி, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, காத்திருப்பு போராட்டம் தொடரும்' என்றனர்.

