Religion
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
நிருபர் குழுவிநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரில் சம்பத் சாலையில் உள்ள
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரில் சம்பத் சாலையில் உள்ள வலம்புரி கற்பக விநாயகர் கோவிலில், நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகருக்கு அருகம்புல், கொலுக்கட்டை படைத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாநகராட்சி அலுவலக வளாக வலம்புரி விநாயகர் கோவிலில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் காட்சியளித்தார். சித்தி விநாயகர் கோவில், கற்பக விநாயகர் கோவில், கல்யாண விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா, வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அந்தியூரில்...
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா, தவிட்டுப்பாளையம், போலீஸ் ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இந்து முன்னணி சார்பில், 16 சிலைகள், மக்கள் சார்பில், 14 சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. இவை நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அத்தாணி ஆற்றில் கரைக்கப்படும். இதேபோல் வெள்ளித்திருப்பூரில் இந்து முன்னணி சார்பில், 9 சிலைகள், மக்கள் சார்பில், 35 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
புளியம்பட்டியில்....
புன்செய்புளியம்பட்டி நகர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய பகுதி என, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் வைத்து, சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 18ம் தேதி அனைத்து சிலைகளும் டாணாப்புதுாரிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பகுடுதுறை-பவானி ஆற்றில் கரைக்கப்படும்.
கோபியில்...
கோபி பச்சைமலை பாத விநாயகர் மூர்த்தி, வித்யா கணபதி மூர்த்திக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், சாரதா மாரியம்மன் கோவில், கோபி வேலுமணி நகரில் வீற்றிருக்கும் சக்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
சத்தியில்...
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், ஆலத்துகோம்பை, கொமராபாளையம், செண்பகபுதுார், தாசரிபாளையம், காந்திநகர், வடக்குப்பேட்டை, வரதம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து, மக்கள் நேற்று வழிபட்டனர். பவானி ஆற்று பாலம் வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு, 108 இளநீர், பவானி நதி தீர்த்தம் கொண்டு மஹா அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து விநாயகர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி சார்பில் சத்தியமங்கலம் பகுதியில், 65 சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்படும்.
பெருந்துறையில்...
பெருந்துறையில் இந்து முன்னணி சார்பில், 36 இடங்களிலும், மக்கள் சார்பில், 25 இடங்களிலும் நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
சென்னிமலையில்...
சென்னிமலையில் விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சென்னிமலை அடிவாரத்தில் உள்ள பழமையான இந்திர விநாயகர், சென்னிமலை கிழக்கு வீதி மேற்கு முக விநாயகர் உட்பட நகரில் பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
சென்னிமலை வட்டாரத்தில், 16 இடங்களில் விநாயகர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் நான்கு சிலைகள் நேற்று மாலையே விசர்ஜனம் செய்யப்பட்டது. மற்ற சிலைகள், 18ம் தேதி மாலை ஊர்வலமாக எடுத்து சென்று எல்.பி.பி., வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னிமலை இந்து முன்னணி, முருக பக்தர்கள் பேரவை சார்பாக ஓவியப்போட்டி, விநாயர் படத்துக்கு வண்ணம் தீட்டுதல் போட்டி நடந்தது.