Economy, business and finance
டைரக்ட் பிளான் to ரெகுலர் பிளான்... கட்டணம் உண்டா?
பெரும்பாலான திட்டங்களுக்கு ஒரு நாமினி இருப்பதே போதுமானதாக இருக்கும். குறிப்பாக, தங்களுடைய சொத்துகள் மற்றும் முதலீடுகள் அனைத்தையும் ஒரே குடும்ப உறுப்பினரிடம் சென்றடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒருவரை நாமினியாக பதிவு செய்யலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மொத் தமாக 150% வருமானம் கொடுத்துள்ளது எனப் படித்தேன். இந்த ஃபண்டில் நான் முதலீடு செய்யலாமா?
கே.ஆர்.வரதராஜன், நிறுவனர், கே.ஆர்.வி, இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் ARN 88304
‘‘முதலீடு செய்யலாம் என்று கடந்த 5 ஆண்டு வருமானத்தை மட்டும் வைத்து முடிவு செய்யக்கூடாது. ஐந்தாண்டுகளில் மொத்த வருமானம் 150% என்றால், ரூ.1 லட்சம் ரூ.2.5 லட்சமாக வளர்ந்து உள்ளது. அதாவது, அந்த ஃபண்டின் ஆண்டு சராசரி வருமானம் (CAGR), 20.11%. இது, அந்த ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் மற்றும் பென்ச்மார்க் குறியீட்டை விட அதிகம் என்றால் தாராளமாக முதலீடு செய்யலாம். கடந்த கால வருமானம் எதிர்காலத்திலும் அதேபோல் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சுருக்கமாக, நல்ல 5 ஆண்டு வருமானம் என்பது ஃபண்டை ஆய்வு செய்ய ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே; முதலீடு செய்வதற்கான ஒரே காரண மாக இருக்கக்கூடாது.
மேலும், ஃபண்டின் தற்போதைய பங்குத் தேர்வு, செலவு விகிதம், ரிஸ்க் அளவு, நிதி மேலாளரின் செயல்பாடு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.’’
நான் தற்போது சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் டைரக்ட் பிளான் முறையில் முதலீடு செய்து வருகிறேன். இதை ஏஜென்ட் ஒருவரிடம் ரெகுலர் பிளானுக்கு மாறத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு ஏதாவது கட்டணம் உண்டா?
காமாக்ஷி எஸ், இணை நிறுவனர், www.walletwealth.co.in ARN 173466
‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் கள் ரெகுலர் பிளான் மற்றும் டைரக்ட் பிளான் இடையே மாறும்போது எக்ஸிட் லோடு (Exit Load) செலுத்த வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. தற்போது, ரெகுலர் பிளானிலிருந்து டைரக்ட் பிளானுக்கும், டைரக்ட் பிளானிலிருந்து ரெகுலர் பிளானுக்கும் மாறும்போது எக்ஸிட் லோடு வசூலிக்கப்படுவதில்லை. இதற்கு முன்பு, ரெகுலர் பிளானிலிருந்து டைரக்ட் பிளானுக்கு மாறும்போது சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எக்ஸிட் லோடு வசூலித்து வந்தன. ஆனால், 2025 மே மாதத்துக்குப் பிறகு இந்த நடைமுறையை நிறுத்துமாறு செபி அறிவுறுத்தியது.
முன்பு ரெகுலர் பிளான்களில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டிய கமிஷன் வழங்கப்பட்டதால், இத்தகைய மாற்றங்களுக்கு எக்ஸிட் லோடு விதிக்கப்பட்டது. தற்போது அந்த கமிஷன் முறை இல்லை. எனினும், குரோத் ஆப்ஷனிலிருந்து டிவிடெண்ட் ஆப்ஷனுக்கு மாற்றம் போன்ற பிற வகை மாற்றங்களுக்கு, விதிமுறைகளுக்கு ஏற்ப எக்ஸிட் லோடு விதிக்கப்படலாம்.’’
முதலீடு, காப்பீடு பாலிசிகளுக்கு எத்தனை நாமினிகள் போதுமானவர்கள்?
வெ.சு.யுவ, தனிநபர் நிதி நிபுணர், www.paisacare.in, ARN 315388
‘‘ஒருவரின் முதலீடுகள், வங்கி சேமிப்புகள், காப்பீட்டுத் தொகைகள் போன்றவற்றை அவர் இல்லாத நேரத்தில் சரியான நபரிடம் சென்றடையச் செய்வதில் நாமினி பதிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பெரும்பாலான திட்டங்களுக்கு ஒரு நாமினி இருப்பதே போதுமானதாக இருக்கும். குறிப்பாக, தங்களுடைய சொத்துகள் மற்றும் முதலீடுகள் அனைத்தையும் ஒரே குடும்ப உறுப்பினரிடம் சென்றடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் ஒருவரை நாமினியாக பதிவு செய்யலாம். ஆனால், சொத்துகளைப் பலருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், தேவைக்கேற்ப ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை பதிவு செய்து, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்கலாம். உதாரணமாக, வாரிசாக இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தலா 50 சதவிகிதம் எனப் பிரித்துக் குறிப்பிடலாம்.
திருமணம், குழந்தைகள் பிறப்பு, விவாகரத்து அல்லது குடும்பத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் நாமினி விவரங்களை மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றங்களைச் செய்வது அவசியம்.’’
