தேங்கியது மழை நீர் வாகனங்கள் திணறல்
உடுமலை: உடுமலை அருகே, நான்கு வழிச்சாலை திட்ட வடிவமைப்பு குளறுபடி காரணமாக, மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதித்தது.
பொள்ளாச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மைவாடி பாலம், உடுமலை – தாராபுரம் ரோடு சந்திப்பு, திருப்பூர் ரோடு சந்திப்பு பகுதிகளில் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.
இந்நிலையில், உடுமலையிலிருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில், இணைப்பு ரோடுகள் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா உள்ளிட்ட பணிகள் நிலுவை உள்ளது.
அதோடு, உயர்மட்ட பாலம் மற்றும் இணைப்பு ரோடுகள் பகுதிகளில், மழை நீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளும் முறையாக மேற்கொள்ளப்படாத நிலையில், நேற்று மதியம் பெய்த மழை காரணமாக, மழை நீர் வெளியேற வழியின்றி, தாராபுரம் ரோடு மற்றும் சர்வீஸ் ரோடுகளில் தேங்கியது.
சிறிய மழைக்கு, பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியதால், போக்குவரத்து பாதித்தது. ரோடு பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டுனர்கள் திணறினர்.
எனவே, நான்கு வழிச்சாலை பணியில், தாராபுரம் ரோடு மற்றும் சர்வீஸ் ரோடுகளின் சந்திப்பு பகுதி பணியை விரைந்து முடிக்கவும், மழை நீர் வடிகால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் வேண்டும்.