Sport
ஆசிய ஹாக்கி: இந்தியா கோல் மழை

மொகி: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. காலிறுதியில் 19-0 என, பாகிஸ்தானை வென்றது.
சீனாவில், பெண்களுக்கான (20 வயது) ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 10வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இந்தியா, 10-0 என முன்னிலையில் இருந்தது.
இந்திய அணி ஆட்டநேர முடிவில் 19-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு பூஜா மாலிக் 'ஹாட்ரிக்' கோல் (27, 49, 51வது நிமிடம்), ரோஷ்னி (9, 60+வது நிமிடம்), சனிகா மானே (13, 23), மது சிதார் (16, 39), சுப்ரியா (40, 54) தலா 2, பூஜா (7), தனுஸ்ரீ (11), சுக்வீர் கவுர் (13), கீதா (18), தனுஜா (25), பூர்ணிமா யாதவ் (33), கிருஷ்ணா சர்மா (48), பினிமா (55) கோல் அடித்தனர்.
மற்ற காலிறுதி போட்டிகளில் சீனா (4-0, எதிர்: கஜகஸ்தான்), ஜப்பான் (2-0, எதிர்: வங்கம்), தென் கொரியா (1-0, எதிர்: மலேசியா) அணிகள் வெற்றி பெற்றன.
அரையிறுதியில் (செப். 12) இந்தியா - தென் கொரியா, சீனா - ஜப்பான் அணிகள் மோதவுள்ளன.
ஆண்களுக்கான (20 வயது) ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதியில் (செப். 11) இந்திய அணி, மலேசியாவை எதிர்கொள்கிறது. 'ஏ' பிரிவு லீக் சுற்றில் இந்தோனேஷியா, தென் கொரியா, சீனதைபே அணிகளை வீழ்த்திய இந்தியா, ஜப்பானுக்கு எதிராக 'டிரா' செய்தது. முடிவில், 10 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் மோதுகின்றன.