Politics
“அமைச்சர் பதவிக்காக விசிக வெளியேறியது” - திருமா பேச்சுக்கு பிரேமலதா பதிலடி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அதாவது, கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் திமுகவின் இறுக்கமான அணுகுமுறையால் தான் கூட்டணி உடைந்தது என்றும், கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு 100 சதவீதம் திமுக தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்த விமர்சனம் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில் திருமாவளவனின் பேச்சுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அவர்களுக்கு ஒரு அமைச்சர் கிடைத்ததால் அவர்கள் வேறு கூட்டணிக்கு போயிருக்கிறார்கள். இது தான் உண்மை, இதை யாரும் மறைக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி கூட தவெகவுக்கு வெளியே இருந்து ஆதரவு தெரிவித்து அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதை நீங்கள் சொல்ல வேண்டியது தானே? எதற்கு கூட்டணிக்கு செல்கிறீர்கள். வன்னி அரசு சட்டசபையில் எனக்கு நேராக தான் உட்கார்ந்திருக்கார். அவரும் மரியாதை நிமித்தமாக தினமும் எனக்கு வணக்கம் சொல்வார், நானும் அவருக்கு வணக்கம் சொல்வேன்.
என்னை பொறுத்தவரைக்கும் அங்கே எல்லோரும் எனக்கு சகோதரர்கள் தான். ஆனால், ஒரு பேச்சு என்று வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை. அதனால் நான் பதில் சொல்கிறேன். இல்லையென்றால் இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சகோதரர் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது, நீங்கள் கூட்டணி மாறுனீர்கள். இது தான் உண்மை. நீங்கள் விரும்பியது அமைச்சர் பதவி, இதற்காக நீங்கள் சென்றிருக்கிறீர்கள். இதற்கு எதற்கு தேமுதிகவை நீங்கள் இழுக்கிறீர்கள்? தொகுதிகளை முடிவெடுக்க வேண்டியது திமுகவும், அவர்கள் தலைமையும் தான். அப்படி பார்த்தால் உங்களுக்கு எல்லாம் இரண்டு இரண்டு சீட்டு அதிகமாக தான் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.
அதனால் நாம் வேறு ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அடுத்தவர் மீது குற்றம் சொல்வது மிகவும் தவறான செயல். அதனை திருமாவளவன் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். இனிமேலும் அதை பற்றி பேச மாட்டார் என்று நினைக்கிறேன். அப்படி அவர் திரும்பவும் பேசினால் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தேமுதிக மீது மட்டும் ஏன் காழ்புணர்ச்சி? அப்படி என்ன தேமுதிகவை பார்த்தால் பயம்? எங்களுக்கு 10 சீட்டு கொடுத்தது ஏன் விசிகவுக்கு கண்ணை உறுத்துகிறது? அதை கூட்டணி தலைமை எடுக்கின்ற முடிவு, அதை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)