அணையில் பிளாஸ்டிக் கழிவு தவிர்க்க நடவடிக்கை தேவை
உடுமலை: அமராவதி அணை மற்றும் பூங்காவில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை முற்றிலுமாக அகற்றி, மாசுபாட்டை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 55 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல்வேறு நகரங்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான கிராமங்களுக்கு அமராவதி அணையிலிருந்து, ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரே குடிநீர் ஆதாரமாக உள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அணைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் அணைப்பகுதியில் பலவகையான பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்கின்றனர்.
மேலும், பராமரிப்பில்லாத அணைப்பூங்கா ‘குடி’மகன்களின் புகலிடமாக மாறி விட்டது. அவர்கள், காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை அணை பகுதியில் வீசுகின்றனர். இதனால், பூங்கா மற்றும் நீர் தேக்க பகுதியிலும் பிளாஸ்டிக் மயமாகி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும். மீண்டும் கழிவுகள் வீசாமல் தவிர்க்க கண்காணிப்பு செய்ய வேண்டும். அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.