கால்நடைகளுக்கு துல்லிய சிகிச்சை அளிக்க நவீன எக்ஸ்ரே கருவி
காரமடை, செப். 9- கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு துல்லியமான சிகிச்சை அளிக்க 5 இடங்களில், நவீன எக்ஸ்ரே
கோவை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு துல்லியமான சிகிச்சை அளிக்க 5 இடங்களில், நவீன எக்ஸ்ரே மற்றும் டிஜிட்டல் ரேடியோகிராபி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு நோயின் தன்மையை விரைந்து அறிந்து, துல்லியமாக சிகிச்சை அளிக்க, அண்மையில் கோவை மாவட்டத்தில், டவுன்ஹாலில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனை, காளப்பட்டி, காரமடை உட்பட 5 இடங்களில், நவீன எக்ஸ்ரே மற்றும் டிஜிட்டல் ரேடியோகிராபி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் சுரேஷ் கூறியதாவது:-
கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கள கால்நடை மருத்துவர்களுக்கு, மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ரே கருவி மற்றும் டிஜிட்டல் ரேடியோகிராபி தொழில்நுட்பத்தின் செயல்பாடு, பயன்பாடு மற்றும் அதன் மூலம் கால்நடைகளில் ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகளை விரைவாகக் கண்டறியும் முறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த தொழில்நுட்பம் வாயிலாக இனி வரும் காலங்களில், நோய்களின் தன்மையை, விரைந்து துல்லியமாக அறிந்து, கால்நடைகளை நோய்களிலிருந்து உடனடியாக காப்பாற்ற இயலும். வட்டார அளவில் கால்நடைகளுக்கு அங்கேயே சிறந்த சிகிச்சை அளிக்க முடியும். இதனால் கால்நடை விவசாயிகள், சிகிச்சைக்காக கால்நடைகளை அழைத்துக் கொண்டு மாவட்ட அளவிலான பெரிய மருத்துவமனைகளுக்கு வருவது குறையும். கால்நடைகளை பாதுகாக்க இன்னும் நிறைய தொழில்நுட்பங்களை கால்நடை பராமரிப்புத்துறை அறிமுகப்படுத்தி, கால்நடை விவசாயிகளுக்கு பக்க பலமாக நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.