Economy, business and finance
பூட்டிய வீட்டில் நகை,பணம் திருடியவர் கைது

பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் கோங்காடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பெரிண்டோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியூர் சென்றிருந்தார்.
பின்னர் 17ம் தேதி காலை வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, படுக்கையறை அலமாரியில் பையில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்து 62 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீதரன் அளித்த புகாரின் பேரில், கோங்காடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர் மலப்புரம் மாவட்டம் வட்டல்லுார் குற்றவ பகுதியைச் சேர்ந்த அப்துல் லத்தீப் 35, என்பதும், அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இதைடுத்து அவரை கைது செய்தனர்.