இந்தியன் வங்கி, ரயில்வே அணி மாநில கூடைப்பந்தில் ‘சாம்பியன்’
சென்னை: சென்னையில் நடந்த மாநில கூடைப்பந்து போட்டியில், ஆடவர் பிரிவில் சென்னை இந்தியன் வங்கியும், மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே அணியும் ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றன.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், இருபாலருக்குமான 76-வது தமிழ்நாடு சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. பல மாவட்ட அணிகள் பங்கேற்றன.
நாக்-அவுட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இதன் இறுதி லீக் போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன.
இதில் மகளிர் பிரிவு இறுதி லீக் போட்டியில், தெற்கு ரயில்வே அணியும், சென்னை ஐ.சி.எப்., அணியும் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தெற்கு ரயில்வே அணி 66 – -51 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு பின், மாநில சாம்பியன் பட்டத்தை, மீண்டும் கைப்பற்றியது. ஆடவர் பிரிவில் இந்தியன் வங்கி அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.