மாமல்லையில் தனி தனி கட்டணங்கள் வசூலிப்பதால் பயணியர் குழப்பம்
மாமல்லபுரம், செப். 10– மாமல்லபுரத்தில், பாரம்பரிய சின்ன வளாகத்தில் தொல்லியல்துறை, கலங்கரை விளக்கம் என,
மாமல்லபுரத்தில், பாரம்பரிய சின்ன வளாகத்தில் தொல்லியல்துறை, கலங்கரை விளக்கம் என, வெவ்வேறாக வசூலிக்கப்படும் கட்டணங்களால், பயணியர் குழப்பமடைந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
அவற்றை காண நுழைவுக் கட்டணமாக, இந்தியரிடம், தலா 40 ரூபாய், சர்வதேச பயணியரிடம், தலா 600 ரூபாய் என, தொல்லியல்துறையின் வசூலித்து வருகின்றனர். ஓரிடத்தில் பெறும் நுழைவுச்சீட்டில், அனைத்து சிற்பங்களையும் காணலாம்.
இது ஒருபுறமிருக்க, தொல்லியல் சிற்ப வளாகத்தில், மகிஷாசுரமர்த்தினி குடவரை பகுதி பாறைகுன்றில், கலங்கரை விளக்கம் மற்றும் அதையொட்டி கடல்சார் அருங்காட்சியகம் என உள்ளது. கப்பல் போக்குவரத்து துறையின் கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலங்கள் இயக்குநரகம் கட்டுப்பாட்டில், நிர்வகிக்கப்படுகின்றன.
இந்நிர்வாகம், கலங்கரை விளக்கத்தின் மேற்பகுதி செல்ல, தலா 10 ரூபாய், கடல்சார் அருங்காட்சியகத்தை காண, தலா 10 ரூபாய் என, பயணியரிடம் தனி நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குடவரைகளை காணும் பயணியர், அதே பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்குச் செல்லும்போது, அங்கு தனி கட்டணம் என்பதை அறிந்து குழப்பமடைகின்றனர். அத்துடன் ‘ஒரே நுழைவுச்சீட்டில், அனைத்து பகுதிகளையும் காணலாம் என்றபோது, தனி கட்டணம் வசூலிப்பது ஏன் என கேட்டு’ தகராறில் ஈடுபடுகின்றனர்.
கலங்கரை விளக்க நிர்வாகத்தினர், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்ததாக, பயணியரிடம் விளக்க வேண்டியுள்ளது. இரண்டு துறைகளுமே மத்திய அரசின் துறைகள். பயணியர் குழப்பம், தகராறு கருதி, அவற்றின் கட்டணத்தை ஒருங்கிணைத்து வசூலித்து, வருவாயை சதவீத அடிப்படையில் நடவடிக்கை எடுக்க, பயணியர் வலியுறுத்துகின்றனர்.